வீட்டு வாடகை உதவிப்பணம் இனிமேல்மூன்று மாதத்துக்கு ஒருமுறை மாறலாம் புத்தாண்டில் புது நடைமுறை அமுலுக்கு!
பிரான்ஸில் ஜனவரி 1, 2021 முதல் வீட்டுவாடகை உதவிக் கொடுப்பனவு (aides personnalisées au logement-APL) வழங்கும் நடைமுறையில் மாற்றங்கள் வருகின்றன.இனிமேல் தற்போது நடைமுறையில் இருப்பது போன்று ஆண்டு முழுவதும் மாதாந்தம் ஒரே தொகை உதவிப்பணமாகக் கிடைக்காது.
அதன்படி குடியிருப்பாளரது சமகால வருமானத்தின் (calcul des aides au logement en temps réel) அடிப்படையில் வாடகை உதவித் தொகை தீர்மானிக்கப்படவுள்ளது.
மூன்று மாத காலப்பகுதிக்கு ஒருமுறை வருமானத்தைக் கணக்கிட்டு (une réactualisation tous les trois mois) அதன்படி உதவிப் பணம் எவ்வளவு என்பது கணிப்பிடப்படும்.குடியிருப்பாளர் ஒருவரது முதல் ஆண்டு மொத்த வருமானத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்ற வாடகை உதவித் தொகை இனிமேல் மூன்று மாத காலப்பகுதிக்கு ஒரு முறை கூடிக் குறையலாம்.
ஆண்டு முழுவதும் 12மாதங்களுக்கும் ஒரே தொகை வழங்கும் நடைமுறை இனிமேல் இருக்காது. வீட்டுவாடகை உதவிப்பணத் திட்டத்தை மறுசீரமைக்கும் (La réforme des APL) இந்தப் புதிய நடைமுறை காரணமாக சுமார் ஆறு மில்லியன் குடியிருப்பாளர் கள் பாதிக்கப்படுவர் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
மூன்று மாதகால வருமானத்தின் மொத்த அளவைக் கணிக்கும் புதிய நடைமுறையை குடும்ப நல உதவி நிறுவனம் (CAF) வழமை போன்று மேற்கொள்ளும். இணைய (online) வழியில் அல்லது தபால் ஊடாக வருமானத்தை உறுதிப்படுத்துமாறு (déclaration trimestrielle) குடியிருப் பாளர்கள் கேட்கப்படுவர்.
மறுசீரமைப்பு தொடர்பான முழுமையான விவரங்கள் அடங்கிய கடிதங்கள் சகல குடியிருப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்படவுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அடைப்புக்குறிக்குள் உள்ளவை பிரெஞ்சு மொழிச் சொற்கள்)
குமாரதாஸன். பாரிஸ்.