ரயில் பாதையில் வீழ்ந்த பாரிய தூண்:
பிரான்ஸ் RER C சேவைகள் தொடர்ந்து பாதிப்பு!
பாரிய கொங்கிறீட் குறுக்குத் தூண் ஒன்று (beam) தண்டவாளத்தில் இடிந்து விழுந்ததால் RER C மார்க்கத்தில் கடந்த சில நாட்களாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நீண்ட சேவைகள் சில முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன. இன்னும் சில குறைக்கப்பட்டுள்ளன. பயணிகளுக்கு மாற்று போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
பெரும்பாலும் இந்த மாத நடுப்பகுதி வரை இதே நிலைமை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தண்டவாளங்களில் மேலாக நிறுவப்பட்டிருந்த சுமார் 300 தொன் எடைகொண்ட பாரிய கொங்கிறீட் தூணே கடந்த வாரம் இரவு நேரத்தில் திடீரென இடிந்து வீழ்ந்தது.
பாரிஸில் RER C வழித்தடத்தில் Bibliothèque François-Mitterrand தரிப்புக்கும் Paris-Austerlits ரயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் நடந்த இந்த அனர்த்தத்தில் ரயில்களோ அன்றிப் பயணிகளோ பாதிக்கப்படவில்லை.
பாரம் தூக்கிகளின் உதவியுடன், 45 மீற்றர் நீளமான அந்தக் கொங்கிறீட் தூணை துண்டுகளாக அறுத்து வெளியேற்றும் பாரிய பணிகள் அப்பகுதியில் இரவு பகலாக நடைபெற்றுவருகிறன.
வேலைகள் எப்போது முடிவடையும் என்பதை திகதியிட்டுக் கூற முடியாது என்றும் பெரும்பாலும் இம்மாத நடுப்பகுதியில் வழமை நிலை திரும்பலாம் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
RER C ரயில் சேவையைப் பயன்படுத்திவரும் ‘நவிகோ’ பயனாளர்களுக்கு இந்த மாதக் கட்டணத்தைப் பகுதியாக மீளளிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டுவருகிறது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
——————————————————————
குமாரதாஸன். பாரிஸ்