Featured Articlesஅரசியல்செய்திகள்

கத்தலோனியாவின் பாராளுமன்றத்தில் பிரிவினைவாதிகள் மட்டுப்படுத்தப்பட்டார்கள், அற்றுப்போகவில்லை.

ஞாயிறன்று ஸ்பெயினின் கத்தலோனிய மாநிலத்தில் நடந்த தேர்தல் அந்த நாட்டினரால் மட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றியத்திலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டது. காரணம் பார்ஸலோனா நகரைத் தலைநகராகக் கொண்டு, ஸ்பெயினின் வடகிழக்கிலிருக்கும் பிரத்தியேக அதிகாரங்கள் கொண்ட கத்தலோனிய மக்களிடையே தனிநாட்டுக் கோரிக்கை பலமாக இருப்பதாலாகும்.

ஸ்பெயினிலிருந்து வித்தியாசமான ஆயிரம் வருடங்களுக்கும் அதிகமான சரித்திரத்தைக் கொண்ட கத்தலோனியா 7.5 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஸ்பெயினின் சுபீட்சமான மாநிலமாகும். அப்பிராந்தியம் தனி மொழி, தனிக் கொடி, கலாச்சாரம் பாராளுமன்றம் மட்டுமன்றி தனக்கென ஒரு தேசிய கீதத்தையும் கொண்டதாகும். 

நீண்ட காலமாகவே தனி நாடு கோரிவந்த அப்பிரதேச அரசியல்வாத்கள் 2017 இல் ஸ்பெயினின் மத்திய அரசின்  அனுமதியின்றி தனி நாட்டுக்கான ஒரு தேர்தலை நடத்தினார்கள். விளைவாக மத்திய அரசால் ஏழு மாதங்கள் நாட்டின் சுயாட்சி உரிமைகள் பறிக்கப்பட்டன. 2019 இல் கத்தலோனியத் தனி நாட்டுக் கோரிக்கையாளர்களான அரசியல்வாதிகளுக்கு 9 – 13 வருடங்கள் வரை சிறைத் தண்டனை கொடுத்துத் தீர்ப்பு விதித்தது நாட்டின் உச்ச நீதிமன்றம்.

ஞாயிறன்று நடந்த தேர்தலின் வாக்குகளின்படி ஸ்பெயின் தேசிய சோசியல் டெமொகிரடிக் கட்சி 625,000 வாக்குகளையும் தனி நாட்டுக் கோரிக்கையாளர்களான பழமைவாத இடதுசாரிகள் 580,000 வாக்குகளையும் பெற்று தலா 33 பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருக்கிறார்கள். 

பிரிவினையை விரும்பும் வேறு கட்சிகளும், புதியதாக ஒரு வலதுசாரி நிறவாதக் கட்சியும் தேர்தலில் வெற்றிபெற்றிருக்கின்றன. மொத்தத்தில் தனிநாட்டையும், வெவ்வேறு அளவிலான பிரிவினையையும் விரும்புகிறவர்கள் பாராளுமன்றத்தில் அதிக இடங்களைப் பெற்றிருப்பினும், தேசிய ஒற்றுமையை ஆதரிக்கும் சோசியல் டெமொகிரடிக் கட்சியின் பலம் கடந்த தேர்தலை விட இருமடங்காகியிருக்கிறது.

கொரோனாத் தொற்றுக்கள் மோசமாக இருந்ததால் இந்தத் தேர்தலைத் தள்ளிப் போடும்படி வெவ்வேறு பக்கங்களிலிருந்தும் கேட்கப்பட்டன. ஆனால், நீதிமன்றம் நடத்தியே ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தியதால் காரணமாகத் தேர்தல் நடத்தப்பட்டது. கொரோனாத் தொற்றுக்குள்ளாகியவர்கள், சுகமாகித் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், தொற்று இல்லாதவர்கள் என்று ஒவ்வொரு பாகமாக வாக்காளர்களைப் பிரித்து வாக்களிக்க நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

55 விகிதமானவர்களே தேர்தலில் வாக்களித்திருந்தனர். எதிர்பார்த்தது போலவே பலர் தபால் மூலமாக வாக்களித்திருந்தனர். இவையே தனிநாட்டை ஆதரிப்பவர்களின் வாக்குகள் குறைவாக இருந்ததற்குக் காரணமாகக் குறிப்பிடப்படுகிறது. 

“பிரிவினைக் கோரிக்கைகள், அவற்றால் எழுந்த மனக்கசப்புக்களை ஒதுக்கிவைத்துவிட்டு நாம் ஒன்றுபட்டு முன்னேறவேண்டும்,” என்று தேர்தல் முடிவுகளின் பின்பு நாட்டின் தேசிய சோசியல் டெமொகிரடிக் கட்சியின் கத்தலோனியத் தலைவர் மக்களைக் கேட்டுக்கொண்டிருக்கிறார். எப்படியாயினும், கத்தலோனியாவை ஆள்வதற்கான கூட்டணி அமைப்பதில் பெரும் கஷ்டங்கள் ஏற்படுமென்று கனிக்கப்படுகிறது. காரணம் அதிக இடங்களைப் பெற்ற கட்சிகள் ஒவ்வொன்றும் தமது கோட்பாடுகளில் மற்றவையுடன் ஒன்றுபோகக்கூடியவை அல்ல என்பதாலாகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *