பாரிஸ் தேவாலயக் கூரைக்கு ஆயிரம் ஓக் மரங்கள் தெரிவு!
பாரிஸ் நகரின் புகழ் பெற்ற நொர்த்-டாம் (Notre-Dame de Paris) மாதா கோவிலின் கோபுரக் கூரையை மீள நிறுவுவதற்காக ஆயிரம் ஓக் மரங்கள்(oaks) தெரிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் பல மரங்கள் நூறாண்டுகள் பழமை வாய்ந்த முதிர்ந்த மரங்கள் ஆகும்.அவை தமிழில் சீமை ஆலமரங்கள் என அழைக்கப்படு கின்றன.
பிரான்ஸின் சகல பிராந்தியங்களிலும் உள்ள வனங்களில் இருந்து மரங்களை வழங்குவதற்குத் தனியார் வனவள உரிமையாளர்கள் பெரிதும் ஆர்வத்துடன் முன்வந்துள்ளனர் எனத் தெரிவிக்கப் படுகின்றது. “தங்கள் வாழ்நாளில் கிடைக்கமுடியாத அரியதோர் வரலாற்றுச் சந்தர்ப்பம் இது” என்று மரங்களை வழங்குவோர் அதனைப் பெருமைப்படுத்திக் குறிப்பிட்டுள்ளனர்.
சுமார் இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த எட்டு மரங்கள் சார்த்(Sarthe) என்ற இடத்தில் தெரிவு செய்யப்பட் டுள்ளன. மரங்களைத் தறிக்கும் வேலைகள் ஆரம்பமாகி உள்ளன.
உயர்ந்த கூம்பு வடிவக் கூரையின் தீராந்திகள் முதல் சட்டப் பலகைகள் வரை முழுவதும் ஓக் மரங்களால் மட்டுமே வடிவமைக்கப்படவுள்ளன.
பாரிஸ் நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக நகர மையத்தில் நிமிர்ந்து நின்றிருந்த பெருமைக்குரிய – 93 மீற்றர் உயரம் கொண்ட – தேவாலயக் கூரையை இரண்டாண்டுகளுக்கு முன்னர் தீ முற்றாக விழுங்கியது. முழுவதும் ஓக் மரங்களால் வடிவமைக் கப்பட்டிருந்த 12ஆம் நூற்றாண்டுகாலக் கலை வடிவக் கூரை 2019 ஏப்ரலில் நிகழ்ந்த பெருந் தீ அனர்த்தத்தினால் முற்றாக எரிந்து அழிந்தது.
கோபுரக் கூரை 2024 ஏப்ரல் மாதத்துக்கு முன்னராக அதன் முந்திய வடிவத்தி லேயே முழுவதும் மரங்களால் மீள நிர்மாணிக்கப்படும் என்று அதிபர் மக்ரோன் உறுதி அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.-
குமாரதாஸன். பாரிஸ்.