சுற்றுப்புற சூழலை நச்சாக்கும் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு வரி போடவிருக்கிறது ஐரோப்பிய ஒன்றியம்.

குறிப்பிட்ட ஒரு நாட்டில் தயாரிக்கப்படும் குறிப்பிட்ட பொருள் கரியமிலவாயுவை எவ்வளவு வெளியேற்றுகிறது என்பதைக் கணித்து அதற்கேற்ப அப்பொருளை இறக்குமதி செய்வதற்கான சுற்றுப்புற சூழல் மாசுபடுத்தும் வரியை அதன் மீது சேர்க்கலாமா என்ற முடிவை இன்று ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் எடுக்கும்.

கடந்த நவம்பரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நீண்டகால வரவு செலவுத் திட்டம் போடப்பட்டபோது “ஐரோப்பிய ஒன்றியத்தினுள் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு நிகரான பொருட்களைக் குறைந்த விலையில் தயாரிக்கும் நாடுகளில் அத்தயாரிப்புக்கள் எவ்வளவு கரியமிலவாயுவை வெளியிடுகின்றன என்பதைக் கணித்து அவைக்கான இறக்குமதி வரி போடவேண்டும்,” என்று சிந்திக்கப்பட்டது. இதன் நோக்கம் உலகில் எந்த நாட்டில் ஒரு பொருளைத் தயாரித்தாலும் அத்தயாரிப்பால் ஏற்படும் கரியமிலவாயு வெளியேற்றத்துக்கான விலையை நிர்ணயிப்பதாகும். அதன் மூலம் ஐரோப்பியத் தயாரிப்புக்கள் சரிசமனாகச் சர்வதேசச் சந்தையில் விலை மூலம் போட்டியிட முடியும். 

உலகின் பல நாடுகளும் தமது நாட்டின் சுற்றுப்புற சூழல் சட்டங்களைக் கடுமையானதாக்கவேண்டும் என்பதே ஐரோப்பிய ஒன்றியத்தின் மறைமுகமான நோக்கமாகும். இன்று சுற்றுப்புற சூழலை இஷ்டத்துக்கு மாசுபடுத்த வாகுவான நாடுகளில் குறிப்பிட்ட பொருட்களைத் தயாரிப்பது மூலம் அப்பொருளின் விலையைக் குறைவாக்கிச் சர்வதேசச் சந்தையில் போட்டியிட முடிகிறது. அதனால், கடுமையான சூழல் மாசுபடுத்தல் சட்டங்களைக் கொண்ட நாடுகளின் தயாரிப்புகள் அங்கிருந்து புலம்பெயர்கின்றன.

https://vetrinadai.com/news/carbon-emissions-trading/

ஐரோப்பிய நாடுகளில் பல வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட [சமீபத்தில் சீனாவும் அறிமுகப்படுத்தியிருக்கும்] கரியமிலவாயு வெளியிடுதலுக்கான விலை நிர்ணயிக்கும் சந்தை போன்ற ஒரு செயற்பாடு அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா போன்ற பெருமளவு தயாரிப்புக்களில் ஈடுபடும் நாடுகளில் இல்லை. எனவே அந்த நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்யும் பொருட்களின் மீது கரியமிலவாயு இறக்குமதி வரி போடுவதன் மூலம் அவர்களையும் தமது நாடுகளில் இதே போன்று சுற்றுப்புற சூழல் வரிகளை அறிமுகப்படுத்தச் செய்வதே ஐரோப்பிய ஒன்றியத்தின் நோக்கமாகும்.

இப்படியான ஒரு வரி ஐரோப்பியத் தயாரிப்புக்களுக்கு மறைமுகமாக உதவுவது போலிருக்கலாகாது என்பதாலேயே கரியமிலவாயு வெளியிடல் பற்றிய விபரங்கள் தெளிவாக விபரிக்கப்படவிருக்கும் ஒரு அறிக்கையை ஜூன் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய மத்திய தலைமையகம் வெளியிடவிருக்கிறது. சர்வதேச வர்த்தகச் சட்டங்களுக்குள் அமையக்கூடிய விதமாக ஐரோப்பிய ஒன்றியம் இந்தக் கரியமிலவாயு இறக்குமதி வரியை உண்டாக்கும் என்று தெரிகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *