ஒன்பது வங்கி ஊழியர்கள் சங்கங்கள் இந்தியாவில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் செய்கின்றன.
ஒன்றுபட்ட வங்கி ஊழியர்கள் அமைப்பு (UFBU) என்ற ஒன்பது அரச வங்கி ஊழியர்கள் சங்கங்களைச் சேர்ந்த சுமார்10 லட்சம் பேர் மார்ச் 15, 16 திகதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். அதனால் அவ்வங்கிகளில் பெரும்பாலான சேவைகள் நடைபெறாது என்று அறிவிக்கப்படுகிறது.
அறிவிக்கப்பட்ட வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அரச வங்கிகளின் பிரச்சினை பற்றியது என்பதால் ICICI வங்கி, HDFC வங்கி போன்ற தனியார் வங்கிகள் வழக்கம்போல இயங்கும்.
வேலை நிறுத்தம் இரண்டு நாளாக இருப்பினும் அதன் முன்னாலிருக்கும் இரண்டு நாட்களும் ஏற்கனவே விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு என்பதால் நாலு நாட்களுக்கு குறிப்பிட்ட வங்கிகளில் மக்கள் சேவைகளை எதிர்பார்க்க முடியாது.
கடந்த மாதம் இந்தியாவின் மத்திய அரசு முன்வைத்த வரவு செலவுத் திட்டத்தில் நாட்டின் இரண்டு அரச வங்கிகளைத் தனியாருக்கு விற்று அதன் மூலம் வரும் தொகையை நாட்டின் கஜானாவில் சேர்த்துக்கொள்வது பற்றி அறிவித்திருந்தார். அந்த நடவடிக்கையை எதிர்த்தே இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆளும் பாஜக அரசு கடந்த நான்கு வருடங்களில் அரச வங்கியொன்றை [IDBI] விற்றது மட்டுமன்றி மேலும் 14 அரச வங்கிகளை இணைத்திருக்கின்றது.
சாள்ஸ் ஜெ. போமன்