மோடிக்கு ஒரு மிதிவண்டி பரிசளித்த “எளிமையான மனிதர்” மார்க் ருத்தெ நெதர்லாந்தில் மீண்டும் அரசமைப்பார்.
கொரோனாத் தொற்றுக்கள் அதிகமாகிவிடக்கூடாதென்ற கவனத்துடன் வழக்கத்துக்கு மாறாக மூன்று நாட்கள் நடந்தது நெதர்லாந்தின் தேர்தல். முதலிரண்டு நாட்களும் கொரோனாப் பலவீனர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. மற்றவர்கள் மூன்றாவது நாளான புதனன்று வாக்களித்தனர். தேர்தலில் மீண்டும் மார்க் ருத்தயின் VVD – D66 கட்சி கூட்டணியே பதவியேற்குமென்று தெரிகிறது.
எங்கும் தனது மிதிவண்டியிலேயே சுற்றித் திரியும் மார்க் ருத்தெ நாட்டின் கொரோனாப் பரவல் நிலையைக் கையாண்ட விதம், அவ்வப்போது கலவரங்களை எதிர்நோக்கியிருந்தாலும், மக்களின் ஆதரவைப் பொதுவாக ஈர்த்திருக்கிறது. அவரது கூட்டணிக் கட்சியொன்றின் தவறுகளுக்காக அவரது ஆட்சியை இவ்வருட ஆரம்பத்தில் கலைத்தாலும் தேர்தலில் அவரது கட்சி முன்னரைவிட மூன்று இடங்களை அதிகமாகப் பெறும் என்று கணிக்கப்படுகிறது.
கூட்டுக் கட்சியான இடதுசாரி D66 தனது பலத்தைப் பாராளுமன்றத்தில் முன்னரைவிட 5 இடங்களை அதிகம் இரண்டாவது பெரிய கட்சியாகிறது. வலதுசாரி இனவாதிகளின் கட்சி கடந்த தேர்தலைவிட மூன்று இடங்களைக் குறைவாகப் பெறுகிறது. மிருகங்களுக்கு நல்வாழ்வு கொடுக்கவேண்டுமென்று போராடும் அரசியல் கட்சியினர் ஆறு இடங்களை வெல்வார்கள் என்று குறிப்பிடப்படுகிறது. 150 இடங்களைக் கொண்ட நெதர்லாந்துப் பாராளுமன்றத்தில் இத்தேர்தலின் பின்னர் 17 கட்சிகள் இடம்பெறுவார்கள்.
தனது கூட்டுக் கட்சிகளுடன் சேர்ந்து மார்க் ருத்தெ இத்தவணை நாலாவது முறையாகப் பிரதமராகிறார். முன்னைய ஆட்சிகளில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் செய்த தவறுகளால் அத்தலைவர்கள் அக்கட்சிகளின் தலைமைப் பதவியிலிருந்து விலகிக்கொள்ள மார்க் ருத்தெயே நெதர்லாந்தின் பலமான அரசியல்வாதிகாகத் திகழ்கிறார்.
எளிமைக்குப் பெயர்போனவர் மார்க் ருத்தெ. இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஆட்சியைக் கலைத்தபோது தனது மிதிவண்டியில் அவர் அரண்மனைக்குச் சென்று பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தமை உலகெங்கும் பேசப்பட்டது. அதேபோலவே 2018 இல் பிரெக்ஸிட் பேச்சுவார்த்தைகளுக்கு பிரிட்டிஷ் பிரதமர் தெரெசா மே தனது உல்லாசக் காரில் வந்திறங்கியபோது மிதிவண்டியில் போய் அனைவரையும் அசரவைத்தார் மார்க் ருத்தெ. அவரது ஆட்சியில் மிதிவண்டிக்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமென்று குறிப்பிடப்பட்டு அதற்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
டச் மொழியில் fiets என்றழைப்படும் மிதிவண்டிப் பாவிப்பை Tour de Force என்று விளம்பரம் செய்து 2017 – 2027 வரை 20 % அதிகரிக்கும் குறிக்கோளை அறிமுகம் செய்திருந்தது. மிதிவண்டிப் பாவிப்பை “fietskilometers” களால் “Fietsland” அதிகரிக்க வேண்டும் என்கிறது டச் அரசு.
சாள்ஸ் ஜெ. போமன்