இறைச்சிப் பசுக்கள் வெளியேற்றும் மீத்தேன் வாயுவைக் குறைக்க ஒரு தாவர உணவு உதவுகிறது.
உலகில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் மாடுகள் வெளியேற்றும் மீத்தேன் வாயு வளிமண்டலத்தில் பெரும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அம்மிருகங்களுக்கு நீருக்குள் வளரும் ஒரு வித தாவரத்தை உணவாகக் கொடுப்பதன் மூலம் அவைகள் வெளியேற்றும் மீத்தேன் வாயுவின் அளவை 80 % ஆல் குறைக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் அமெரிக்க, ஆஸ்ரேலிய ஆராய்ச்சியாளர்கள்.
21 இறைச்சி மாடுகளை ஐந்து மாதங்கள் தொடர்ந்து அவதானித்ததன் மூலம் மேற்கண்ட முடிவை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். அந்த மிருகங்களுக்குக் குறிப்பிட்ட தாவரத்தைக் கொடுத்ததன் மூலம் அவையின் இறைச்சியின் ருசியிலும் மாற்றம் ஏற்படவில்லை என்று குறிப்பிடுகிறார்கள்.
Red algae என்றழைக்கப்படும் இந்தப் பாசியினம் வெப்பமண்டலத்திலேயே வளர்கிறது. எனவே இவற்றை இறைச்சி, பால் மாடுகளுக்குக் கொடுத்து அவைகளின் மீத்தேன் வாயு வெளியீட்டைக் குறைப்பதானால் அப்பாசியின் விவசாயத்தை பற்பல மடங்குகள் அதிகரிக்கவேண்டுமென்பது ஒரு பெரிய பிரச்சினையாகத் தலை தூக்குகிறது. அந்த விவசாயத்துக்காக பாவிக்கப்படும் சக்தி, அவற்றை உலகெங்கும் போக்குவரத்து மூலம் கொண்டு செல்வதற்கான சக்தி, செலவுகள், அவைகளால் உண்டாகும் நச்சுவாயு வெளியீடு ஆகியவை அந்த மிருகங்கள் வெளியேற்றும் மீத்தேன் வாயுவால் ஏற்படுவதை விட மிகக் குறைவாக இருக்கவேண்டும்.
அத்துடன் அந்த மிருகங்கள் மீத்தேன் வாயுவை வெளியேற்றாமல் பதிலுக்கு கரியமிலவாயுவை முன்னரைவிட அதிகம் வெளியேற்றுகின்றன. கரியமிலவாயு சாணத்துடன் சேர்ந்து வெளியேறிப் பூமியின் சுழற்சியில் சேர்ந்து கரைய அதிக காலம் எடுக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்