என்றுமில்லாத அளவு அவசரமாகப் பூத்துக் குலுங்குகின்றன சக்கூராப் பூக்கள், ஜப்பானில்.
ஜப்பானின் கியோட்டோ நகரில் செர்ரிப் பூக்கள் வழக்கத்தை விட முன்னதாக மார்ச் 26 ம் திகதியளவிலேயே பூத்துக் குலுங்க ஆரம்பித்துவிட்டன. இது பற்றிய புள்ளிவிபரங்களை ஜப்பான் சேகரிக்க ஆரம்பித்த 70 ஆண்டுகளின் எந்த ஆண்டுகளிலும் இவ்வளவும் முன்னதாக அப்பூக்கள் பூத்துக் குலுங்கியதில்லை என்கிறது நாட்டின் காலநிலை அவதானிப்பு அமைப்பு.
கியோட்டோ நகரில் மட்டுமன்றி நாட்டின் மேலும் பல நகரங்களிலும் அதே சமயத்தில் சக்கூரா பூக்கள் பூத்துக் குலுங்கி மக்களை மகிழ்வித்து இலைதுளிர்காலம் வருவதை எடுத்துச் சொல்கின்றன. விஞ்ஞானக் கவனிப்புகள் இப்படியிருக்க, இலக்கியங்களிலிருக்கும் ஆதாரங்களை வைத்தும் அப்பூக்கள் எப்போது பூத்தன என்று ஆராய்ந்திருக்கிறார் யசூயூக்கி ஔநோ என்ற சுற்றுப்புற சூழல் ஆராய்ச்சியாளர். 1612, 1409, 1236 ஆகிய ஆண்டுகளில் மார்ச் 26 இலேயே அப்பூக்கள் பூத்திருப்பதாக இலக்கியப் படைப்புகளில் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.
சக்கூரா பூக்களைப் பற்றிய பல காவியங்கள் வெவ்வேறு வகையில் ஜப்பானில் காணக்கிடைக்கின்றன. பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு, வாழ்க்கையின் வெவ்வேறு மாற்றங்கள் ஆகியவற்றை அடையாளமாகக் குறிப்பிடும் சக்கூராப் பூக்கள் ஜப்பானியக் கலாச்சாரம், சம்பிரதாயங்களில் பலமாக வியாபித்திருக்கிறது.
உலக ரீதியான காலநிலை மாற்றமே இதற்கான காரணமாக இருக்கக் கூடும் என்கிறார்கள் ஜப்பானிய விஞ்ஞானிகள். 1953 இல் கியோட்டோவின் மார்ச் மாதச் சராசரி வெப்ப நிலை 8.6 C ஆக இருந்து 2020 இல் அது 10.6 C ஆக அதிகரித்திருக்கிறது. இதுவரை இவ்வருட மார்ச் சராசரி வெப்ப நிலை 12.4 C ஆக இருக்கிறது.
செர்ரி பூக்கள் கால நிலை மாற்றத்துக்கு ஏற்றபடி மாறிவரும் மரங்களாகும். எனவே, கால நிலை மாற்றத்தைச் சரித்திர ரீதியாக அளப்பதற்கும் ஒரு முக்கிய அளவுகோலாக இருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்