எவர்கிவின் சரக்குக் கப்பல் தன் மீதான பொருட்களுடன் பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான நஷ்ட ஈட்டையும் சுமந்து நிற்கிறது.
உலகின் மிகவும் முக்கிய கால்வாய்ப்பாதையான சுயஸ் ஊடாகப் பயணம் செய்த எவர்கிவின் சரக்குக் கப்பல் கரையில் மோதிச் சிக்குப்பட்டு நின்ற விடயம் உலகமறிந்ததே. பல நாட்கள், பல மில்லியன் செலவு, பல நூறு பேரின் இடைவிடாத முயற்சியின் பின்னர் அவ்விடத்திலிருந்து விடுபட்ட அக்கப்பல் அங்கிருந்து விரைவில் தனது குறியை நோக்கிப் பயணிக்கும் என்று நம்பிய, எழுதிய ஊடகங்களின் கணிப்பையெல்லாம் பொய்யாக்கிவிட்டுத் தொடர்ந்தும் எகிப்திலேயே நங்கூரமிட்டிருக்கிறது.
எவர்கிவின் மீது பல பில்லியன் டொலர்கள் நஷ்ட ஈடு கேட்டு அதை அங்கேயே பிடித்து வைத்திருக்கிறார்கள் சுயஸ் கால்வாய் போக்குவரத்து அதிகாரிகள். பொதுவாக இப்படியான ஒரு சமயத்தில் குறிப்பிட்ட கப்பலை இயக்கும் நிறுவனம் மீது நஷ்ட ஈடு போன்ற கோரிக்கைகள் வைக்கப்படுவது வழக்கமே. ஆனால், எவர்கிவினின் இயக்குனர்களான எவர்கிரீன் நிறுவனம், எகிப்திய அதிகாரிகள், சுயஸ் கால்வாய் துறைமுக அதிகாரம், காப்புறுதி நிறுவனங்கள் ஆகியவையுடன் ஏழு வாரங்களாக நடாத்திவரும் பேச்சுவார்த்தைகளில் எவ்வித முடிவும் கிடைக்காததால் அதை அங்கிருந்து வெளியேற எகிப்து அனுமதிக்கவில்லை.
எகிப்திய அதிகாரிகளின் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகளில் அக்கப்பலால் ஏற்பட்ட செலவு, கப்பலை மீட்க ஏற்பட்ட செலவு, அதனால் மற்றைய நூற்றுக்கணக்கான கப்பல்களுக்கு சுயஸ் கால்வாய் அதிகாரம் கொடுக்கவேண்டிய நஷ்ட ஈடுகள், சுயஸ் கால்வாயின் மீதான நம்பிக்கையில் ஏற்பட்ட பாதிப்புக்கான நஷ்ட ஈடு மற்றும் காப்புறுதிகள் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் கேட்டும் தொகை சுமார் 1 022 059 550 டொலர்களாகும். பல நூற்றுக்கணக்கான வெவ்வேறு நிறுவனங்கள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவர்களெல்லாரும் சேர்ந்து ஒரு முடிவை எடுக்க மேலும் பல வருடங்களாகலாம் என்று கணிப்பிடப்படுகிறது. அதுவரை கப்பலும் அதன் மீது சுமத்தப்பட்ட பொருட்களும் அங்கிருந்து நகரமுடியுமென்று தோன்றவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்