நியூ ஜெர்ஸியில் கட்டப்படும் இந்துத் தேவாலயத்தில் சாதி குறைந்த தொழிலாளர்களின் உழைப்புச் சுரண்டப்படுவதாகப் புகார்.

தாழ்த்தப்பட்ட ஜாதித் தொழிலாளர்களை இந்தியாவிலிருந்து கொண்டுவந்து அடிமைகள் போன்று பிழிந்தெடுப்பதாக அவ்வேலையாட்கள் அமெரிக்காவில் புகார் செய்திருக்கிறார்கள். போச்சசன்வாசி அஸ்கார் புருஷோத்தம் ஸ்வாமிநாராயண் சன்ஸ்தா என்ற இந்து மதக் குழு ஒன்றின் மீது தொழிலாளர்கள் செவ்வாயன்று வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள் தங்களை எப்படி மோசமாகக் கையாள்கிறார்கள் என்று தொழிலாளிகள் விபரித்திருக்கிறார்கள். 

கட்டாயமாகத் தொழிலாளர்களை வாரத்தில் 90 மணி நேரம் வேலை வாங்குதல், மணிக்கு 1 டொலர் மட்டும் ஊதியம், ஊதியத்தை முழுசாகக் கொடுக்காமல் பிடித்து வைத்தல், பொய்யான விசாக்களில் தொழிலாளர்களைக் கூட்டிவரல், தொழிலாளிகளை இடைவிடாமல் கண்காணித்தல், மிரட்டல்கள் போன்ற குற்றங்கள் குறிப்பிட்ட இந்து மத அமைப்பின் தலைவர்கள் மீது சாட்டப்பட்டிருக்கின்றன.

“நான் பலவிதமான துறைகளில் வெவ்வேறு விதமாகப் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்காக நீதிமன்றத்தில் வாதித்திருக்கிறேன். அதனால் அவர்கள் விபரித்த வேலையிட நிலைகளுடன் ஒப்பிடும்போது இந்தக் கோவில் கட்டட வேலையாட்களின் நிலைமை என்னை அதிரவைத்தது,” என்கிறார் வழக்குப் பதிவு செய்த தொழிலாளிகளின் சார்பில் தோன்றவிருக்கும் வழக்கறிஞர் பற்றீசியா கக்கலெச்.

இந்தியாவிலிருந்து தாழ்த்தப்பட்ட சாதியினர், ஏழைகளை நடந்துகொண்டிருக்கும் நியூ ஜெர்சி கோவில் கட்டுவதற்காக அந்த இந்து அமைப்பினர் அணுகுகிறார்கள். அவர்களுக்கு மாதம் 450 டொலர்கள், மணிக்கு 1.20 டொலர் தருவதாக உறுதிகூறிக் கூட்டிவருகிறார்கள். அமெரிக்காவின் தொழிலாளர்களின் ஆகக்குறைந்த மணித்தியாலச் சம்பளம் 7.25 டொலர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நியூ ஜெர்சியில் தொழிலாளர்களின் ஆகக்குறைந்த சம்பளம் மணிக்கு 12 டொலர்களாகும்.

அந்த வேலையிடத்துக்குள் நுழைந்ததும் தொழிலாளிகளின் கடவுச்சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.  இவ்வழக்கு 200 தொழிலாளர்கள் சார்பில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தலித்துக்களாகும்.

கோவில் கட்டடம் உயரமான சுவர்களால் மூடிய பிராந்தியத்துக்குள் நடக்கிறது. அப்பகுதி முழுவதும் பல கண்காணிப்புக் கமராக்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. அவைகளின் மூலம் தொழிலாளர்கள் எப்போதும் கண்காணிக்கப்படுகிறார்கள். சிறிய தவறுகளுக்கும் சம்பளத்தில் தண்டம் விதிக்கப்படுகிறது. எதிர்த்துப் பேசுகிறவர்களுக்குத் தண்டனைகள் கொடுக்கப்படுவதுடன் இந்தியாவுக்குத் திருப்பியனுப்புவதாக மிரட்டல்கள் செய்யப்படுகின்றன. 

குறிப்பிட்ட தொழிலாளிகள் 2011 இல் இந்தியாவுக்கு R-1 விசாக்கள் மூலம் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அந்த விசாக்கள் மத சேவை செய்கிறவர்களுக்கே வழங்கப்படுகின்றன. அவைகளைச் சம்பளம் பெற்றுக்கொள்ளும் தொழில்களுக்குப் பயன்படுத்துவது குற்றமாகும். 

தொழிலாளர்களின் குற்றச்சாட்டுக்களையடுத்து குற்றவியல் புலன் விசாரணையாளர்கள் குழு உடனடியாக வேலை நடக்குமிடத்துக்குச் சென்று ஆராய்ந்து வருவதாகத் தெரிகிறது. 

தமிழ் நாட்டில் சிறீரங்கத்திலிருக்கும் ரங்கஸ்வாமி கோவில் தான் உலகின் மிகப்பெரிய பிராந்தியத்தில் கட்டப்பட்டிருக்கும் கோவிலாகும். இதன் பரப்பளவு சுமார் 156 ஏக்கராகும். நியூ ஜெர்சியில் ரொபின்வில்லில் இருக்கும் சிறீவெங்கடேஸ்வரா கோவில் சுமார் 162 ஏக்கர் பிரதேசத்தையுடையது. உலகின் மிகவும் அதிகமான செலவில் கட்டப்பட்ட இந்துக் கோவில் என்றழைக்கப்படும் இதற்காக 100 கோடி ரூபாய்களுக்கு மேல் செலவிடப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

BAPS  சுருக்கமான பெயரில் குறிப்பிடப்படும் அந்த இந்து மத அமைப்பின் தலைவர்கள், கோவில் நிர்வாகிகள் தாம் அப்படியான குற்றச்சாட்டுக்கள் எதையும் இதுவரை தொழிலாளர்கள் மூலமாக நேரிடவில்லை என்றும் விசாரணையின் மூலம் எல்லாமே பொய்யென்று நிரூபிக்கப்படுமென்றும் குறிப்பிடுகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *