ஆபிரிக்காவின் கொங்கோ கின்ஷாஷாவின் எரிமலையொன்று சனியன்று இரவு விழித்து வெடித்துச் சிதறுகிறது.

உலகின் முக்கியமான செயற்படும் எரிமலைகளிலொன்று கொங்கோ கின்ஷாஷாவிலிருக்கிறது. ந்யிராகொங்கோ என்ற அது கோமா நகரையடுத்திருக்கிறது. சனியன்று இரவு அந்த எரிமலை விழித்து, உறுமிச் சீறியெழ ஆரம்பித்திருக்கிறது. அதனால் கோமா நகரத்தவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எரிமலை வெடிப்பு ஆரம்பித்த சமயத்தில் அதன் செயற்பாடு ருவாண்டா எல்லையை நோக்கியிருந்ததால் நகரின் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல் நிலைமையக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். செய்தி நிறுவனங்களிடமிருந்து அதிக விபரங்களில்லாமல் சமூகவலைத்தளத்துப் படங்களே தற்போது வலம்வந்துகொண்டிருக்கின்றன.

எரிமலைக்குழம்பு தனது திசையை மாற்றி பக்கத்து நகரமான கோமாவை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டதுடன் அப்பிராந்தியமெங்கும் பெரும் பயப்பீதி ஏற்பட்டு மக்கள் தப்பியோட ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்களில் ஒரு பகுதியினர் ருவாண்டா எல்லையை நோக்கித் தப்பியோடுகிறார்கள். கோமா நகர விமான நிலையத்தருகே எரிமலைக்குழம்பு நெருங்கிவிட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

நாட்டின் அரசு அவசர அவசரமாகக் கூடி அதிகாரிகளுக்குப் புதிய கட்டளைகளைப் பிறப்பித்ததைத் தொடர்ந்து கோமா நகர அதிகாரிகள் மக்களைக் காப்பாற்றும் திட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், மக்களோ பீதியடைந்து கோமா நகரைவிட்டு வெளியேறச் சகல வழிகளில் முயல்வதாகத் தெரியவருகிறது.

இதே எரிமலை 2002 இல் சீறியெழுந்தபோது கோமா நகரம் பெருமளவில் பாதிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் இறந்ததுடன் விமான நிலையமும் சேதங்களுக்கு உள்ளானது. அதற்கு முன்பு 1977 இல் ஏற்பட்ட எரிமலை வெடிப்பொன்று 600 க்கும் அதிகமானவர்களைக் கொன்றது, சேதங்கள் மிகவும் அதிகமாக இருந்தன.

கோமா நகரத்தில் பல வருடங்களாகவே குழப்பமும், கலவரமும் போரும் நிகழ்ந்து வருகிறது. அங்கிருக்கும் மக்களுக்குக் காவலுக்காக ஐ.நா-வின் கண்காணிப்புப் படையொன்றும் கோமா நகரையடுத்து முகாம் கொண்டிருக்கிறது. அங்கே ஐ.நா இராணுவமும் அவர்களைச் சேர்ந்த குடும்பத்தினரும் வசிக்கிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *