இளவரசி டயானாவுக்குப் பல திரிபுபடுத்தப்பட்ட தகவல்களைக் கொடுத்து 1995 இல் எடுக்கப்பட்ட நேர்காணலுக்காக பி.பி.சி மன்னிப்புக் கோரியது.
அதுவரை எவராலும் பெரிதும் அறியப்படாத மார்ட்டின் பஷீர் என்ற பத்திரிகையாளரால் 1995 இல் பி.பி.சி நிறுவனத்துக்காக, மறைந்துவிட்ட இளவரசி டயானாவிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் உலகப் பிரசித்தி பெற்றது. பல உலகத் தலைவர்களை நேர்காண மார்ட்டின் பஷீருக்கு அதன் பின்னர் சந்தர்ப்பங்கள் கிடைத்து அது அவரைப் பிரபலப்படுத்தியது. அதே சமயம் அந்த நேர்காணல் பிரிட்டிஷ் அரச குடும்பத்திலும் அதிர்வை ஏற்படுத்தி மாற்றங்களைக் கொண்டுவந்தது.
குறிப்பிட்ட அந்த நேர்காணல் திட்டமிடப்பட்ட விதம், அதற்குப் பின்னால் நடந்த நாடகங்கள் ஆகியவைகளுக்காக தற்போது பிபிசி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டிருக்கிறது. கடந்த வருட இறுதியில் டயானாவின் சகோதரர் சார்ள்ஸ் ஸ்பென்சர் தன்னை பிபிசி நிறுவனத்தினால் பொய்யான தகவல்கள் தந்து ஏமாற்றி தனது சகோதரிக்கு மார்ட்டின் பஷீரை அறிமுகப்படுத்தும்படி கேட்டுக்கொண்டதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். அதன் விளைவாக பிபிசி அந்த நேர்காணலின் பின்னணியில் நடைபெற்றவை என்னவென்று தெரிந்துகொள்ள ஒரு விசாரணையை ஆரம்பித்தது.
அந்த விசாரணையின் விபரங்களுடனான அறிக்கை வெளியிடப்பட்டதுடன் அந்த நேர்காணலில் நடந்து குழறுபடிகள், பொய்களுக்காக பிபிசி மன்னிப்புக் கேட்டிருக்கிறது.
இளவரசி டயானாவை புலனாய்வுப் பிரிவு ஒட்டுக் கேட்டு வருவதாகவும், அதற்காக இரண்டு அதிகாரிகள் செயற்பட்டு வருவதாகவும் பொய்யான ஆதாரங்களை மார்ட்டின் பஷீர் சார்ள்ஸ் ஸ்பென்சரைச் சந்தித்தபோது காட்டி அவரை நம்பவைத்தார். அதனால் சார்ள்ஸ் ஸ்பென்சர் தனது சகோதரிக்கும் மார்ட்டின் பஷீருக்கும் சந்திக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
பிபிசி நிறுவன உயரதிகாரிகள் பின்னர் சந்தேகப்பட்டுப் பல தடவைகள் மார்ட்டின் பஷீரிடம் அவர் எப்படி நேர்காணலை ஒழுங்கு செய்தார் என்று கேட்டும் உண்மையான விபரங்களைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. எனவே அந்த உயரதிகாரிகள் எல்லாவற்றையும் மறைத்துவிட்டார்கள் என்று தற்போது தெரியவந்திருக்கிறது. பொய்களைச் சொல்லி நேர்காணல்களை, பேட்டிகளை ஒழுங்குசெய்வது பிபிசி நிறுவன அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்று குறிப்பிட்டே பிபிசி தற்போது மன்னிப்புக் கேட்டிருக்கிறது.
அந்த நேர்காணலில்தான் முதல் தடவையாக டயானா தனக்கும் இளவரசர் சார்ள்ஸுக்குமிடையிலேற்பட்டிருக்கும் மனமுறிவுகளைப் பற்றிப் பகிரங்கமாக பேசினார். சார்ள்ஸுக்கும் அவரது முன்னாள் காதலி கமில்லாவுக்கும் இருக்கும் தொடர்பையும், தனக்கும் டோடி அல் பாயத்துக்கும் ஏற்பட்டிருந்த காதலைப் பற்றியும் வெளிப்படுத்தினார்.
அவரது பகிரங்கப்படுத்தல்கள் பிரிட்டிஷ் அரச குடும்பத்தினுள் பூகம்பத்தை ஏற்படுத்தியது. சார்ள்ஸ் – டயானா விவாகரத்து போன்றவற்றுக்கும் வித்திட்டது. அதனால் அத்தம்பதிகளுக்குள் மனக்கசப்பு அதிகமாக அது தங்களது வளர்ப்பையும் பாதித்ததாக அவர்களின் பிள்ளைகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அத்துடன் டயானா அதன்பின் தான் இரகசியப் பொலீசாரால் தொடரப்படுவதான பயத்தில் வாழ்ந்ததாகவும், நிம்மதியை இழந்ததாகவும் அதுவே அவரது இறப்புக்கும் பக்கக் காரணம் என்றும் மகன் வில்லியம் குறிப்பிட்டிருக்கிறார்.
பல பரிசுகளைப் பெற்ற அந்த நேர்காணலின் பரிசுகளைத் திருப்பிக் கொடுப்பதாக பிபிசி குறிப்பிடுகிறது. மார்ட்டின் பஷீர் பிபிசி-யிலிருந்து பதவி விலகினார். அரச குடும்பத்தினரிடமும் பிபிசி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு அதற்காக அவர்களுக்குத் தனித்தனியாக மன்னிப்புக் கடிதங்கள் அனுப்புவதாகவும் குறிப்பிட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்