புதிய பிரதமர் பதவியேற்பதைத் தடுக்க பாராளுமன்றத்தைப் பூட்டிவிட்ட முன்னாள் பிரதமர் – சமூவா.
நியூசிலாந்துக்கு அருகேயிருக்கும் தீவுகளாலான நாடான சமூவாவில் முதல் தடவையாக ஒரு பெண் பிரதமர் சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றிருக்கிறார். பியாமே நாவோமி மதொபா [Fiame Naomi Mata’afa]தனது பதவிப்பிரமாணம் செய்துகொள்ளலைப் பாராளுமன்றத்துக்கு வெளியே ஒரு கொட்டகை போட்டு நடத்தவேண்டியதாயிற்று. தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் துலீபா சாய்லெலை மலிலெகாய் பாராளுமன்றத்தைப் பூட்டிவிட்டார், முடிவை ஏற்றுக்கொள்ளத் தொடர்ந்தும் மறுத்து வருகிறார்.
ஏப்ரல் மாதத்தில் நடந்த தேர்தலில் மதொபா மிகக் குறைந்த வித்தியாசத்தில் வெற்றியடைந்தார். 51 பிரதிநிதிகளைக் கொண்ட பாராளுமன்றத்தில் இரண்டு கட்சிகளுக்கும் 25 – 25 இடங்கள் கிடைத்தபின் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் பிரச்சினை விசாரிக்கப்பட்டு 2020 ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மதொபாவின் “உண்மையான கடவுளை விசுவாசியுங்கள்,” கட்சிக்கு 26 வது பிரதிநிதியை வழங்கும்படி உத்தரவிட்டது.
தேர்தல் நடந்து 45 நாட்களுக்குள் பாராளுமன்றம் முதல் தடவையாகக் கூடவேண்டுமென்ற அரசியலமைப்புச் சட்டத்தின்படி கடைசி நாளான திங்களன்று மதொபா பதவியேற்க வந்தபோது உயர்நீதிமன்றத்தின் தலைவரும் எதிர்க்கட்சியின் ஆதரவாளருமான ஒருவரை பாராளுமன்றத்தைப் பூட்டும்படி பொலீசாருக்கு உத்தரவிட அது பூட்டப்பட்டது. எனவே வெளியே தற்காலிகமான கூடாரமொன்றில் பதவிப்பிரமாணமும், அமைச்சரவை அறிவிப்பு நடந்தது.
சமுவாவுக்கு என்று சொந்தமான இராணுவம் கிடையாது. பொலீஸ் தலைவர் தான் அரசியலில் பக்கம் சேரமாட்டேன், நீதிமன்றத்தின் உத்தரவை அமுல்படுத்துகிறேன் என்று சொல்லிவிட்டார். நடாத்தப்பட்ட பதவியேற்பை அரசுக் கவிழ்ப்பு என்று குறிப்பிட்டு மலிலெகாய் பத்திரிகையாளர் சந்திப்பில் தனது கட்சியே தொடர்ந்தும் நாட்டின் ஆட்சியை நடாத்துவதாகச் சொல்லியிருக்கிறார்.
22 வருடங்களாக நாட்டின் பிரதமராக இருந்தவர் மலிலெகாய். அவரது கட்சியான “மனித உரிமைகள் காக்கும் கட்சியில்” தான் மதொபவும் இருந்தார். புதிய கட்சியில் கடந்த வருடம் தான் சேர்ந்துகொண்டார். மலிலெகாய்க்குச் சீனாவின் ஆதரவு உண்டு. அதேபோல நியூசிலாந்தும் அவரை ஆதரித்து வந்திருக்கிறது.
நாட்டில் தேர்தலுக்குப் பின்னர் உண்டாகித் தொடர்ந்தும் ஏற்பட்டிருக்கும் இழுபறி நிலைமை சமூவாவின் ஸ்திரத்தன்மையைக் குலைத்து, ஜனநாயகத்தைப் பலவீனப்படுத்தும் என்று பலரும் கருதுகிறார்கள். நியூசிலாந்துப் பிரதமர் சமூவாவின் அரசியல்வாதிகள் நிலைமையைச் சமாதானமாகத் தீர்த்துக்கொள்ளவேண்டும் என்று கேட்டிருக்கிறார். சீனாவிடமிருந்து இதுவரை எவ்வித நகர்வுகளும் உண்டாக்கப்படவில்லை.
சாள்ஸ் ஜெ. போமன்