2019 இல் டிரம்ப் மூடிய பாலஸ்தீனர்களுக்கான அலுவலகத்தை ஜெருசலேமில் மீண்டும் திறக்கவிருக்கிறது அமெரிக்கா.
ஆர்ட்டிக் கவுன்சில் மாநாட்டுக்காக ஐஸ்லாந்தில் ரஷ்ய வெளிவிவகார அமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை நடாத்திய அமெரிக்க வெளிவிவகார அமைச்சரின் இன்றைய விஜயம் இஸ்ராயேலாகும். ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ராயேலுக்கும் இடையிலான போர்நிறுத்தம் தொடர்வதற்கான வழிகளை உண்டாக்குவதற்காக அவர் நத்தான்யாஹூவையும், பாலஸ்தீனத் தலைவர் முஹம்மது அப்பாஸையும் சந்திக்கவேண்டியிருந்தது.
இஸ்ராயேலின் தாக்குதலால் சிதறவைக்கப்பட்டிருக்கும் காஸா பிராந்தியத்தை மீண்டும் கட்டியெழுப்ப அமெரிக்கா உதவுவதுடன், அதற்காக மற்ற நாடுகளின் உதவிகளையும் ஒன்றுசேர்க்கும் என்று அந்தனி பிளிங்கன் உறுதியளித்தார். காஸாவை மீண்டும் சீர்செய்ய உதவுதல் ஹமாஸ் தனது ஆயுதக் கிடங்கை மீண்டும் நிரப்ப உதவுதலாக மாறலாகாது என்பதில் அமெரிக்கா மிகவும் உறுதியுடனிருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் தொடர்ந்தும் இஸ்ராயேல் தனது பிராந்தியத்தில் பாதுகாப்பை நிலைநாட்டச் செய்யும் நடவடிக்கைகளை அமெரிக்கா ஆதரிக்கும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மேற்குச் சமவெளி, எகிப்து, ஜோர்டான் ஆகிய நாடுகளுக்கும் பிளிங்கன் விஜயம் செய்யவிருக்கிறார். ஆனால் அவர் ஹமாஸ் இயக்கப் பிரதிநிதிகளுடன் எந்தவிதச் சந்திப்பிலும் ஈடுபடப்போவதில்லை. ஹமாஸ் இயக்கத்தினருடன் கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்