சென்ட் பீட்டர்ஸ்பெர்கை விட்டு பறந்துவிட்ட விமானத்தைத் திருப்பியழைத்து எதிர்க்கட்சியாளர் கைதுசெய்யப்பட்டார்.

ஒரு வாரத்துக்கு முன்னர் தனது நாட்டின் வானத்தின் மீது பறந்த விமானத்தை இறக்கி ஜனாதிபதியை விமர்சிக்கும் ஊடகவியலாளரைக் கைதுசெய்தது பெலாரூஸ். அதேபோன்ற பரபரப்பான நிகழ்ச்சியொன்று செண்ட் பீட்டர்ஸ்பெர்க் விமான நிலையத்தில் திங்களன்று நடந்திருக்கிறது. அவ்விமான நிலையத்திலிருந்து பறந்துவிட்ட போலிஷ் விமானத்தை மீண்டும் கீழே இறக்கி புத்தின் அரசை விமர்சித்து வரும் எதிர்க்கட்சித் தலைவரான ஆந்திரேய் பிவோவாரோவ் என்பவரைக் கைதுசெய்தது ரஷ்யா.

https://vetrinadai.com/news/lithuania-protasevich/

சர்வதேச அளவில் பிரபலமாகித் தற்போது ரஷ்யாவில் சிறையில் தள்ளப்பட்டிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னியின் அரசியல் இயக்கம் தவிர ஆந்திரேய் பிவோவாரோவ்வின் இயக்கமான “ஒரு திறந்த ரஷ்யா” இயக்கமும் வரவிருக்கும் ரஷ்யத் தேர்தலில் புத்தினுக்குத் தலையிடி கொடுத்து வருகிறது. எனவே தனக்கெதிராகச் செயற்படும் அரசியல் இயக்கங்களின் முக்கிய தலைவர்களை வெவ்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்திச் சிறையிலடைத்து வருகிறார் புத்தின். 

“ஒரு திறந்த ரஷ்யா” இயக்கம் கடந்த வாரம் “ரஷ்யாவுக்கு எதிரானது” என்று பிரகடனப்படுத்தப்பட்டு அதில் அங்கத்துவம் பெறுவது சட்டத்துக்குப் புறம்பானதாக்கப்பட்டிருக்கிறது. ஆந்திரேய் பிவோவாரோவின் மீது உடனடியாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. அதே இரவு அவரது வீடும், அவரது கட்சிச் சகாக்கள் இருவரின் வீடுகளும் சோதனையிடப்பட்டன. அவர் கடந்த வருடம் ரஷ்ய அரசுக்கு விரும்பத்தகாத விடயங்களைப் பத்திரிகைகளில் வெளியிட்டதாகவும், கைது செய்யப்பட்டபோது போலந்துக்குத் தப்பியோட முயன்றதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருக்கிறது.

செவ்வாயன்று புத்தின் அரசின் மேலுமொரு விமர்சகரும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான டிமிட்ரி கோட்கோவ் கைதுசெய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவர் மீது 2015 – 2017 காலகட்டத்தில் தனது வீட்டுக்கான வாடகையைக் கொடுக்கவில்லையென்று வழக்குத் தொடரப்பட்டிருக்கிறது. 

“வெளிநாட்டுக் கைக்கூலிகள்”, “அரசுக்கு விருப்பமில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறவர்கள்,” ஆகிய தலைப்புக்களில் ரஷ்ய அரசு தன்னை விமர்சிப்பவர்களைத் தாக்கி வருகிறது. செப்டெம்பரில் வரவிருக்கும் தேர்தலையொட்டியே இப்படியான நடவடிக்கைகள் சமீபகாலத்தில் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன என்று கருதப்படுகிறது. ஜனாதிபதி புத்தினின் கட்சியான “ஒன்றிணைந்த ரஷ்யா” தனது ஆதரவைச் சமீப காலத்தில் கணிசமான அளவில் இழந்துவிட்டிருப்பதாலேயே இப்படியான வழிகள் எதிர்ப்பவர்களை மிரட்ட உபயோகிக்கப்படுகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *