முஹம்மதுவை இழிவாகக் குறிப்பிட்ட குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களை பாகிஸ்தான் விடுவிக்கிறது.
ஷௌகாத் இம்மானுவேலும் மனைவி ஷகுவ்தா கௌசாரும் 2017 இல் தமது கிராமத்திலிருக்கும் இஸ்லாமியத் தலைவரொருவருக்கு இஸ்லாத்தின் ஸ்தாபகரான முஹம்மதுவைப் பற்றிக் கேவலமாகக் குறிப்பிட்டு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டார்கள். அதற்காக பாகிஸ்தான் நீதிமன்றம் அவர்களிருவருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது.
மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக ஏழு வருடம் அவர்கள் இதுவரை காத்திருந்தார்கள். அவர்களிருவரும் லாகூர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டது. முஹம்மதுவைப் பற்றிப் பழிப்பதற்குப் பாகிஸ்தானிய சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்படும்.
குற்றஞ்சாட்டப்பட்ட அந்தத் தம்பதி படிப்பறிவில்லாதவர்களென்றும், அவர்களுக்கு அந்தச் செய்தியை எழுதவே தெரியாதென்றும், அதை அனுப்பியது அவர்களல்ல என்ற அவர்கள் தரப்பு வாதம் இதுவரை ஏற்கப்படவில்லை. மனித உரிமைக் குழுக்கள் அவர்களை வேண்டுமென்றே யாரோ மாட்டிவிட்டதாகவும், நேர்மையான வழக்கு விசாரணை நடக்கவில்லையென்றும் குறிப்பிட்டு இவ்விவகாரத்தைச் சர்வதேச அளவில் பரப்பியிருந்தன.
ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்றம் பாகிஸ்தானிய ஏற்றுமதிகளுக்குக் கொடுத்திருந்த சலுகைகள் சிலவற்றை மேற்கண்ட தம்பதியின் வழக்கிலிருக்கும் அநீதியைச் சுட்டிக்காட்டிச் சமீபத்தில் நிறுத்தியிருந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்