ஜோர்டானிய அரசைக் கவிழ்க்கும் திட்டப் பின்னணியில் சவூதியுடன் இஸ்ராயேலும் கைகோர்த்திருந்ததா?
ஏப்ரல் மாதத்தில் ஜோர்டானின் அரசன் அப்துல்லாவைக் கவிழ்க்கும் திட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டு அதற்காக அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அதையடுத்துக் கைதுசெய்யப்பட்டவர்களில் இருவர் மட்டுமே தற்போது நீதிமன்றத்தில் நிறுத்தப்படவிருக்கிறார்கள்.
இளவரசரின் ஈடுபாடு பற்றிய விடயங்கள் குடும்பத்திற்குள்ளேயே பேசித் தீர்க்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டது. நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறவர்கள் இருவருமே சவூதி இளவரசருக்கு நெருங்கியவர்கள் என்ற உண்மை அந்த ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னால் சவூதி அரேபியாவின் கைகளும் இருந்ததா என்ற கேள்வியை எழுப்பியிருக்கின்றன.
ஜோர்டான் குற்றவியல், உளவுத்துறை அதிகாரிகள் அந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகள் பற்றி அமெரிக்க, பிரிட்டிஷ், இஸ்ராயேல், ஜோர்டான், மற்றும் சவூதிய அதிகாரிகளிடையே நடாத்திய ஆய்வின்படி சவூதி அரேபியாவுக்கு, மட்டுமன்றி இஸ்ராயேலின் பிரதமர் பெஞ்சமின் நத்தான்யாஹூவுக்கும் பங்கிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருக்கிறது. சவூதி அரேபியாவும், இஸ்ராயேலும் இணைந்து நடாத்த முற்பட்ட ஆட்சிக் கவிழ்ப்புக்கு ஒத்துழைப்புக் கொடுத்தவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியின் இஸ்ராயேல் – பாலஸ்தீன அமைதித் திட்டத்துக்கான பிரத்தியேக அதிகாரி ஜராத் குஷ்னர் என்றும் குறிப்பிடப்படுகிறது.
“நூற்றாண்டின் அமைதித்திட்டம்” என்று டொனால்ட் டிரம்ப்பால் விபரிக்கப்பட்ட திட்டத்தை நிறைவேற்றுவதில் ஜோர்டான் அரசன் இடையூறாக இருந்ததாலேயே அவரை ஆட்சியிலிருந்து அகற்றி அவரது ஒன்றுவிட்ட சகோதரன் ஹம்ஸாவைப் பதவியிலிருத்த எண்ணியிருப்பதாகத் தெரிகிறது. அதுபற்றிய திட்டங்கள் நீண்டகாலமாகவே தீட்டப்பட்டதாகவும் அதை ஜோர்டான் உளவுத்துறை அறிந்திருந்ததாகவும் தெரியவருகிறது.
டொனால்ட் டிரம்ப்பின் அமைதித் திட்டப்படி ஜெருசலேம் நகரின் முழுமையான அதிகாரத்தையும் இஸ்ராயேல் பெறுவதில் ஜோர்டான் அரசன் இடைஞ்சலாக இருந்திருக்கிறார். ஜெருசலேமிலிருக்கும் புனித கட்டடங்களின் பேணல் பொறுப்பு ஜோர்டான் அரசிடமே இருக்கிறது. அவர்கள் அதை இஸ்ராயேலிடம் கையளிப்பதன் மூலமே இஸ்ராயேல் அந்த நகரத்தை முழுவதுமாக ஆக்கிரமிக்க முடியும் என்று நத்தன்யாஹூவும், டொனால்ட் டிரம்ப்பும் திட்டமிட்டதாகவும் அதற்குச் சவூதியின் ஆதரவும் கிடைத்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.
நத்தான்யாஹுவின் திட்டமும், நடவடிக்கைகளும் அவரது அமைச்சர்கள், அதிகாரிகளில் உயர்மட்டத்தினராலேயே விரும்பப்படவில்லை என்றும் அதனால் அவர்கள் ஜோர்டானிய அரசனை எச்சரித்திருப்பதாக விபரங்கள் வெளியாகியிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்