ஜோர்டான் அரசனின் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சியா?

ஜோர்டான் அரசன் அப்துல்லா II தனது நாட்டில் திட்டமிடப்பட்டிருந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முடியடித்ததாகச் செய்திகள் வெளியாகின்றன. அரசனின் ஒன்றுவிட்ட சகோதரன் முன்னாள் அரசன் ஹூசேனின் மகன் ஹம்சா பின் ஹூசேன் தனது அரண்மனையில் பாதுகாப்புச் சிறையில் வைக்கப்பட்டிருக்கிறார். 

ஆட்சிக் கவிழ்ப்புக்குத் திட்டமிட்ட ஹம்சா அல் ஹூசேனுடைய ஆதரவாளர்கள் என்று கருதப்படும் சுமார் 20 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஹம்சா அல் ஹூசேன் தனது அறிக்கையில் தான் தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதைத் தெரிவித்திருக்கிறார். அதேசமயம் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளில் தான் ஈடுபட்டதில்லையென்றும் மறுப்புத் தெரிவித்திருக்கிறார். 

ஜோர்தானில் அரசனுக்குப் பிறகு அவரது மூத்த மகனே பட்டமேற்பார் என்பதற்கு மாறாக முன்னாள் அரசன் ஹூசேனுக்கும் அவரது ஆங்கிலேய மனைவி நூருக்கும் 1980 இல் பிறந்த மகன் ஹம்சா அல் ஹூசேன் 1999 இல் தந்தையாரால் நாட்டின் அடுத்த பட்டத்து இளவரசன் என்று பிரகடனம் செய்யப்பட்டார். 

ஹூசேன் இறந்தபின் பாரம்பரியத்துக்கு உட்பட மூத்த மகன் 1962 இல் பிறந்த அப்துல்லா II பதவியேற்றார். 2004 இல் அதுவரை பட்டத்து இளவரசனாக இருந்துவந்த ஹம்சா அல் ஹூசேனிடமிருந்து அந்த ஸ்தானம் பறிக்கப்பட்டது. இதுவரை வேறெவருக்குமே அவ்விடம் கொடுக்கப்படாவிட்டாலும் 1994 இல் பிறந்த மகன் ஹூசேன் பின் அப்துல்லாவுக்குக் கொடுக்கப்படலாம் என்ற வதந்தி நிலவுகிறது.

வீட்டுக் காவலில் தான் வைக்கப்பட்டிருப்பதாக பிபிசிக்கு அனுப்பிய ஒரு செய்தி மூலம் தெரிவித்திருக்கும் ஹம்சா அல் ஹூசேன் ஆட்சியிலிருக்கும் அப்துல்லா II இன் கடுமையான விமர்சகராகும். தனது ஒன்றுவிட்ட சகோதரனின் ஆட்சியில் லஞ்ச ஊழல்களும், சொந்த பந்தங்களுக்குப் பிரத்தியேக பதவிகளைக் கொடுத்தல் நிலவுவதாகவும், அதனால் ஆட்சியில் ஒழுங்கில்லையென்றும் பல தடவைகள் விமர்சித்திருக்கிறார் ஹம்சா அல் ஹூசேன். 

அப்துல்லா II வுக்கு அமெரிக்கா உட்படப் பல நாடுகளும் தமது ஆதரவைத் தெரிவித்திருக்கின்றன. செய்திகளைப் பற்றி அவர் இன்னும் எவ்விதக் கருத்துக்களும் தெரிவிக்கவில்லை. மேலும் பல முக்கிய அரசியல், இராணுவத் தலைவர்கள் கைதுசெய்யப்படலாம் என்ற வதந்திகள் நிலவுகின்றன.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *