ஆப்கானிஸ்தானில் புது அத்தியாயம். இருபது வருட கால படைத்தளத்தை விட்டு விலகிச் சென்றது அமெரிக்கா.

“கிழக்கின் குவாண்டனாமோ”(“Guantanamo of the East”) என்று அழைக்கப்பட்டு வந்த பக்ரம் படைத்தளத்தில் (base of Bagram) இருந்து கடைசி அமெரிக்க வீரர்கள் விமானத்தில் ஏறி நாடு திரும்புகின்ற காட்சிகள் வெளியாகி உள்ளன.

தலிபான், அல்கெய்டா தீவிரவாத இயக்கங்களுக்கு எதிரான போரில் இரு தசாப்த காலமாக அமெரிக்கா தனது பலமான கோட்டையாகப் பேணிவந்த பக்ரம் தளத்தை ஆப்கான் படைகளிடம் கையளித்துவிட்டு அங்கிருந்து அடியோடு அகன்று செல்கிறது. ஆப்கானிஸ்தான் நாட்டின் வரலாற்றில் பக்ரம் தளம் கைவிடப்பட்ட இன்றைய வெள்ளிக்கிழமை ஒரு முக்கிய நாள். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு ஒரு புதிய அத்தியாயம் திறக்கப்படு கின்ற நாள் என்றும் கூட இதனைக் குறிப்பிட்டாலும் நீண்ட போர்களையும் அழிவுகளையும் மட்டுமே கண்டு வந்த அந்த மண்ணில் நல்லதொரு மாற்றத்தின் தொடக்கமாக இதனைக் கொண்டாடிவிட முடியாது.

தலிபான்கள் என்கின்ற மிகத் தீவிரமானஇஸ்லாமிய அடிப்படைவாதக் கொள்கைகளைக் கொண்ட ஆயுத இயக்கத்தின்ஆக்கிரமிப்பில் இருந்த ஆப்கானிஸ்தானை மீட்பதற்காக 2001 இல் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் காலூன்றிய தளம் தான் பக்ரம்.செப்ரெம்பர் 11 தாக்குதலுக்குப்பின்னர்அமெரிக்கா தீவிரமாக முன்னெடுத்துவந்த பயங்கரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போரின் முக்கிய மையங்களில்ஒன்றாகவும் அது விளங்கிவந்தது.

சோவியத் ஆக்கிரமிப்பின் போது அதன் படைகளால் முதன் முதலில் நிறுவப்பட்ட பக்ரம் தளம் ஆப்கானிஸ்தான் நாடு மீதான ஆக்கிரமிப்புகளின் ஒர் அமைதிவடிவம். அமெரிக்கா அங்கு காலூன்றியபிறகு பக்ரம் தளத்தை ஓர் இராணுவத் தளம் என்று கூறுவதை விட ஒரு குட்டி “அமெரிக்க நகரம்” என்ற சொல்லும் அளவுக்கு அது பிரமாண்டமாக விரிவு படுத்தப்பட்டது.

சுமார் 2 ஆயிரம் ஹெக்ரயர் பரப்பில்முப்பதாயிரம் அமெரிக்கப் படை வீரர் களுக்காக 24 மணிநேர நவீன சந்தைகள், சினிமா, அருந்தகங்கள், துரித உணவு நிலையங்கள் என்று பல உல்லாச வசதிகளோடு-ஒரு நகரம் போன்ற கட்ட மைப்புகளுடன்-படைத்தளம் காட்சிளித்தது. விசாரணை ஏதும் இன்றிப் பல நூற்றுக் கணக்கானோர் தடுத்துவைக் கப்படுகின்ற சிறை ஒன்றும் அங்கு இருந்தது.அந்தத் தடுப்பு முகாம் சிறை காரணமாகவே பக்ரம் தளம் கிழக்கின் குவாண்டனாமோ (Guantanamo) என்ற பெயர் பெற்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தலிபான்களுடன் அமெரிக்கா நடத்திவந்த பேச்சுக்களை அடுத்தே படைவெளியேற்றத்துக்கான தீர்மானம் எடுக்கப்பட்டது. முன்னாள் அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகமே தலிபான்களுடனான இணக்கத்தைத் தொடக்கி வைத்தது.சுமார் இரண்டாயிரம்பில்லியன் டொலர் நிதியையும் ,சுமார் இரண்டாயிரத்து 500 போர் வீரர்களது உயிர்களையும் விலையாகச் செலுத்திவிட்டு ஆப்கானிஸ்தானில் இருந்து விலகுகின்றது அமெரிக்கா. அது அங்கு தனது இராணுவத் தலையீடைத் தொடக்கி போது மதிப்பிட்ட நிதியை விட மூன்று மடங்கு அதிகமான தொகையை போரில் இழந்துள்ளது. நேட்டோ நாடுகளும் படிப்படியாக அங்கிருந்து தமது படைகளைத் திருப்பி அழைக்கவுள்ளன.

வெளிநாட்டு இராணுவத் தலையீடுகள் எந்த மண்ணிலும் வெற்றியளித்ததாகசரித்திரம் இல்லை.

வியட்நாம் முதல்ஆப்கான் வரை அமெரிக்க ஆக்கிரமிப்புகளின் கதையும் அதுதான்.ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படை நடவடிக்கைகள் முற்றாக முடிவுக்கு வருவதை அதிபர் ஜோ பைடன் எதிர்வரும் செப்ரெம்பர் 11 ஆம் திகதி- உலக வர்த்தக மையத் தாக்குதல் தினத்தன்று-உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

தலைநகர் காபூலில் இருந்து சுமார் 50 கிலோ மீற்றர்கள் வரை தங்களது கட்டுப்பாட்டை விஸ்தரித்துள்ள தலிபான்கள் ஆப்கானிஸ்தானின் 400 மாவட்டங்களை தங்கள் பிடியில் வைத்துள்ளனர். வெளிநாட்டுப் படைகளது வெளியேற்றத்தை வரவேற்றுள்ள அவர்கள், அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்திருக்கின்றனர்.நாடு முழுவதுமாக மீண்டும் தலிபான்களிடம் வீழும் நிலையில் தாங்கள் மேற்குலகினால் கைவிடப்படுவதான உணர்வு ஆப்கன் மக்கள் தரப்பில் காணப்படுகிறது. எந்த இராணுவத் தலையீடுகளும் அமைதியை விட்டுச் செல்லத் தவறிய அந்த நாட்டு மக்களின் தலைவிதி அமெரிக்கப் படைகளின் வெளியேற்றத்துடன் மீண்டும் தலிபான்களின் கைகளில் முழுவதுமாக விடப்படுகிறது. அங்கு பதவியில் உள்ள மிகப் பலவீனமான அரசு தலிபான்களிடம் மண்டியிடப் போகின்ற நாள் வெகு தொலைவில் இல்லை.

அவ்வாறு நாட்டின் அதிகாரம் தலிபான்கள் வசமானால் அங்கு என்ன நடக்கும் என்ற சில கேள்விகளுக்கு விடை தெரியாது. அங்குள்ள மேற்கு நாடுகளின் ராஜதந்திரிகள், தூதரகப் பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர்கள் போன்றோரது பாதுகாப்புக்கு தலிபான்களின் உத்தரவாதம் உள்ளதா?

2001 இல் தலிபான்கள் விரட்டப்பட்ட பிறகு அங்கு பெண்களுக்குக் கிடைத்தசுதந்திரங்கள் நிலைக்குமா? பெண்களின் கல்வி முதல் அவர்களது அடிப்படைச் சுதந்திரங்கள் அனைத்தையும் மறுக்கும் தலிபான்களின் ஆட்சியில்மீண்டும் ஆப்கான் பெண்களின் நிலைமை என்னவாகும்? இப்படிப் பல கேள்விகள் உள்ளன.

பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *