ஜோ பைடன் வெற்றியை ஏற்றுக்கொள்ள மறுக்கும்படி டிரம்ப் நீதியமைச்சுக்கு அழுத்தம் கொடுத்தார்!

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றதை ஏற்றுக்கொள்ள மறுக்கும்படி நீதியமைச்சுக்கு டொனால்ட் டிரம்ப் பெரும் தொல்லை கொடுத்தததற்கான ஆதாரங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அச்சமயத்தில் நீதியமைச்சராகவும், உதவி நீதியமைச்சராகவும் இருந்த ஜெப்ரி ரொஸேன், ரிச்சார்ட் டொனோக் ஆகியோர் தமது கைப்பட எழுதிய குறிப்புகள் ஆகும்.

டொனால்ட் டிரம்ப் அவர்களைத் தொலைபேசியில் விழித்து, “ஜோ பைடன் வெற்றி செல்லுபடியாகாது என்று அறிவிக்கவேண்டும், இல்லையேல் நீதியமைச்சரை மாற்றத் தயங்கமாட்டேன்,” என்று மிரட்டியிருக்கிறார். பதிலாக “ஜனாதிபதித் தேர்தல் முடிவை செல்லுபடியாகாமல் செய்யும் உரிமை நீதியமைச்சுக்குக் கிடையாது,” என்று அமைச்சர் ரொஸேன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

“அதை நீங்கள் செய்யவேண்டியதில்லை. தேர்தல் ஒழுங்காக நடக்கவில்லை என்று மட்டும் சொன்னால் போதும். மிச்சத்தை ரிபப்ளிகன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கவனித்துக்கொள்வார்கள்,” என்று டிரம்ப் பதிலளித்திருக்கிறார் என்கின்றன ரொஸேன் எழுதிவைத்திருக்கும் உத்தியோகபூர்வமான குறிப்புக்கள்.

மேற்கண்ட குறிப்புக்களைக் கைப்பற்றியிருக்கும் அமெரிக்கப் பாராளுமன்றத்தின் கண்காணிப்பு அமைப்பு முன்னாள் ஜனாதிபதியை ஊழல் குற்றங்களுக்காக விசாரித்துத் தண்டிக்கலாமா என்று பரிசீலனை செய்து வருகிறது. அதற்காக அவர்கள் முன்னாள் ஜனாதிபதி காலத்தில் நீதியமைச்சில் முக்கிய பதவியிலிருந்த பலரை விசாரிக்கவிருக்கிறார்கள்.

அதேசமயம் அமெரிக்க வரித் திணைக்களம் பல ஆண்டுகளுக்கான டொனால்ட் டிரம்ப்பின் வரி விபரங்களையும் பாராளுமன்றத்தின் கண்காணிப்புக் குழுவிடம் கையளிக்கவேண்டும் என்று நீதியமைச்சு உத்தரவிட்டிருக்கிறது. அவரது நிறுவனம் திட்டமிட்டே பல வருட காலமாக வரித் திணைக்களத்தை ஏமாற்றி வந்ததாகப் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்திருந்தன. அவை பற்றித் தொடர்ந்தும் விசாரணை நடந்து வருகிறது. டிரம்ப் பதவியிலிருந்த காலத்தில் நீதியமைச்சு அவ்விபரங்களை வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொள்ள மறுத்து வந்திருந்தது.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *