ஆகஸ்ட் 2123 க்கு முன்னர் மியான்மாரில் பொதுத்தேர்தல் நடாத்தப்பட்டு அரசாங்கம் பதவிக்கு வரும் என்கிறது நாட்டின் இராணுவம்.
சுமார் ஆறு மாதங்களுக்கு முன்னர் மியான்மாரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நாட்டின் இராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. அந்தச் செய்தியை இராணுவத்தின் தலைவர் மின் ஔங் லாயிங் நாட்டு மக்களுக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் தெரிவித்தார். பெப்ரவரி மாதத்தில் ஆட்சியைக் கவிழ்த்தபோது அவர் ஒரு வருடத்துக்குள் நாட்டில் பொதுத்தேர்தலை நடத்தில் மக்கள் அரசை நிறுவுவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
கடந்த வாரத்தில் மியான்மார் இராணுவம் தாம் கடந்த வருடத்தில் நடந்த பொதுத்தேர்தலின் வாக்கெடுப்புக்களை ஆராய்ந்ததாகவும் அவற்றில் 11 மில்லியன் ஏமாற்றுக்கள் செய்யப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டு அத்தேர்தல் முடிவை உத்தியோகபூர்வமாக செல்லுபடியாகாததாக்கிவிட்டது. தேர்தலில் வென்ற ஔன் சான் சூ ஷீயும் அவரது நெருங்கிய கட்சித் தலைவர்களும் கைதுசெய்யப்பட்டுத் தொடர்ந்தும் பாதுகாவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மியான்மார் மக்கள் தமது இராணுவத்துக்கு எதிராக நடத்திவரும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. ஒரு பக்கத்தில் இராணுவத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்துக்குத் தயார் செய்துகொண்டிருக்கிறார்கள். அதே சமயம் ஜனநாயக ரீதியாக அமைதியான ஊர்வலங்களும் ஆங்காங்கே தொடர்ந்து நடந்து வருகின்றன. அரச சேவைகளில் இருப்பவர்கள் பலர் வேலைகளுக்குப் போகாமலிருப்பதால் பல திணைக்களங்கள் ஸ்தம்பித்திருக்கின்றன.
வேலைக்கு வராத ஊழியர்களை மருத்துவமனைகளிலும் வேலையிலிருந்து நிற்பாட்டிவிட்டது அரசு. அதனால் நாட்டில் வேகமாகப் பரவிவரும் கொரோனாத்தொற்றுக்களைக் கையாளவது அரசுக்குப் பெரும் சவாலாக இருக்கிறது. அதேசமயம் மக்களின் ஒத்துழையாமைப் போராட்டம் நாட்டின் பொருளாதாரத்தையும் ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. உலக வங்கியின் கணிப்பு இவ்வருடம் மியான்மாரின் பொருளாதாரம் 18 விகிதத்தால் வீழ்ச்சியடையுமென்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்