மக்ரோனின் “ரிக்ரொக் ரீ-சேர்ட்”இளையோரிடையே பிரபலம் !
மக்ரோன் சொல்லவந்த செய்தியை விட அவர் அணிந்திருந்த ரீ-சேர்ட் தான் இளம்தலைமுறையினரை ஈர்த்திருக்கிறது. இளையோரது கவனம் தடுப்பூசி மீது திரும்பியதோ இல்லையோ அதிபரது கறுப்பு”ரீ-சேர்ட்” மீது திரும்பியிருப்பது தெரிகிறது.
வழமைக்கு மாறாக அவர் அணிந்திருந்த ரீ-சேர்ட்டில் காணப்படுகின்ற புதிய சின்னம்(logo) என்ன என்பதை அறிகின்ற ஆர்வம் அனைவரிடமும் எழுந்துள்ளது.அது ஒரு பறவையா? அல்லது ஏதும் ரகசிய குறியீடா? ஆந்தை போன்ற ஒரு வடிவத்திலான அந்த சின்னத்தின் பின்புலத்தை அறியும் விதமான பல்வேறு பதிவுகள் சமூகவலைத் தளங்களில் பகிரப்பட்டுவருகின்றன.மக்ரோன் ரிக்ரொக் ரீ-சேர்ட்(“Macron TikTok t-shirts”) இணையத்தில் பிரபலமாகி வருகிறது. விரைவில் அது விற்பனைக்குக் கிடைக்கும் என்றஇணைய விளம்பரங்களும் வெளியாகி உள்ளன.
பிரான்ஸில் இதுவரை புழக்கத்துக்கு வராத புதிய வகை இலட்சினை கொண்ட ரீ-சேர்ட் அது என்பதால் அதில் உள்ள ஆந்தை “மார்க்”கின் மர்மத்தை அறியப் பலரும் முயன்று வருகின்றனர். பிரபலஆடை வடிவமைப்பாளர்களும் அது பற்றிய ஊகங்களைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் மக்ரோனின் கறுப்பு ரீ-சேர்ட் பற்றிய தகவல் எதனையும் பகிர்ந்து கொள்ள எலிஸே மாளிகை மறுத்து விட்டதாக ‘பரிஷியன்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
மக்ரோன் தற்சமயம் தனது விடுமுறைக் கால வசிப்பிடத்தில் தங்கியிருக்கிறார். வழமையாக கோட் – சூட் அணிந்து தோன்றுகின்ற அரசுத் தலைவர் கடந்தசில தினங்களாக ரீ-சேர்ட் அணிந்தவராகநேரலைகளில் காட்சியளிக்கிறார்.
தடுப்பூசி மீது ஆர்வத்தைத் தூண்டுவதற்காக ரிக்-ரொக் மற்றும் இன்ஸ்ரகிராம் ஊடாக இளையோரின் கவனத்தைக் கவரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்.தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்குப் பதிலளித்து வருகிறார்.தடுப்பூசி ஏற்றிக் கொண்ட பிறகு தனக்கு எந்த விதமான பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என்று இன்று வெளியிட்ட ஒரு பதிவில் அவர் தெரிவித்திருக்கிறார். இன்றைய நேரலையில் “லாகோஸ்ட்போலோ”(Lacoste polo) ரீ-சேர்ட் ஒன்றைஅவர் அணிந்திருந்தார்.
தடுப்பூசி ஏற்படுத்துகின்ற பக்க விளைவுகளையிட்டு அஞ்சுகின்றவர்களுக்கு பதிலளித்த அதிபர் மக்ரோன், “நீங்கள் காரை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்புவதில் உள்ள ஆபத்துகளை விடத் தடுப்பூசியின் ஆபத்துகள் குறைந்தவை” என்று மிக எளிமையான முறையில் விளக்கினார்.
சுகாதாரப் பாஸ் வேண்டாம் என்றால் நாட்டை மூடவேண்டும் என்று கூறிய அவர், சுகாதாரப் பாஸை நடை முறைப்படுத்துகின்ற ஒரே நாடு பிரான்ஸ் மட்டுமே என்று சொல்லப்படுவதை மறுத்தார். வேகமாகப் பரவி வருகின்ற டெல்ரா வைரஸை எதிர்கொள்வதற்காக இத்தாலி, டென்மார்க், ஜேர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளும் அதை ஒத்த கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளன – என்று அவர் தெரிவித்தார்.
மிகக் குறுகிய காலத்தில் தடுப்பூசி தயாரிக்கப்பட்டதாகக் கேள்வி எழுப்புவோருக்கும் மக்ரோன் பதிலளித்தார்.”கடந்த ஐம்பது ஆண்டுகால அறிவியல் வளர்ச்சியின் பெறுபேறாகவே ஒரு பெரும் தொற்று நோய்க்கு உலகம் ஒராண்டுக்குள் மருந்து கண்டு பிடிக்கமுடிந்தது. இதுவரை 11 தடுப்பூசிகள் குழந்தைகளுக்குக் கட்டாயமாக்கப்பட்டுள்ளன” – என்றார் அவர்.
தடுப்பூசி தொடர்பாக மக்ரோன் இவ்வாறு கேள்விகளுக்கு பதிலளிப்பதை அவரது அரசியல் எதிராளிகளும் சில ஆய்வாளர்களும் கிண்டலாக விமர்சித்து வருகின்றனர்.
குமாரதாஸன். பாரிஸ்.