உலகின் முக்கியமான, பெரிய பெற்றோலிய வளப் பிரதேசமொன்று அதை உறிஞ்சுவதில்லையென்று முடிவெடுத்திருக்கிறது.
எதிர்கால எண்ணெய், இயற்கை வாயு தேடுதல் சகலத்தையும் முற்றாக நிறுத்துவதாக கிரீன்லாந்தின் அரசு தீர்மானித்திருக்கிறது. “வட துருவத்தில் எண்ணெய்வளம், இயற்கை வாயு தேடுதல் ஒரு இறந்தகாலக் கதை,” என்கிறார் நாட்டின் கனிவள அமைச்சர் நாயா நத்தானியல்சன். அதன் மூலம் உலகின் பாரிய பெற்றோலிய வளப் பிராந்தியமொன்று என்றும் பாவனைக்கு வரப்போவதில்லை.
அமெரிக்காவின் புவியியல் கனிவள நிலையத்தின் ஆய்வு மூலம் கிரீன்லாந்தின் கீழே 31 பில்லியன் பீப்பாய்கள் அளவான எரிநெய் வளம் இருக்கிறது. ஆனால், அப்பிரதேசத்தில் இதுவரை பொருளாதார இலாபம் தரும் பெற்றோலிய உறிஞ்சல் எதுவும் இதுவரை நடந்ததில்லை.
“இங்கே பெற்றோலியம் உறிஞ்சுவதன் மூலம் மிகப்பெரிய பொருளாதார வெற்றியெதுவும் கிடைக்குமென்று நாங்கள் நம்பவில்லை. ஒருவேளை பல பில்லியன்களை நாங்கள் இழந்துபோகலாம்,” என்கிறார் கனிவள அமைச்சர்.
டென்மார்க்கின் ஒரு பகுதியாக இருக்கிறது கிரீன்லாந்து. ஆனாலும், அத்தீவின் அரிதான கனிவளங்கள் பற்றிய முடிவுகளை எடுக்கும் உரிமை கிரீன்லாந்து அரசிடமே இருக்கிறது. அங்கே சமீபத்தில் தேர்தலில் வென்றிருக்கும் இடதுசாரி அரசு இயற்கையைக் கடுமையாகத் தாக்கும், காலநிலை, சுற்றுப்புற சூழலுக்கு இடர்தரும் முடிவுகளெதையும் எடுக்கத் தயாராக இல்லை என்று ஏற்கனவே உறுதியாக இருக்கிறது.
நாட்டில் சுரங்கத் துறையை மேலும் அபிவிருத்தி செய்து அதன்மூலம் வருமானத்தைப் பெற கிரீன்லாந்து தயார். ஆனால், யுரேனியம் தேடுவதற்கான சுரங்கங்களை அனுமதிக்கத் தயாராக இல்லை என்பதிலும் ஏற்கனவே அரசு தெளிவாக இருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்