இனியொரு முடக்கம் வரவே வராது! சுகாதார அமைச்சர் முழு நம்பிக்கை.
வரும் நாட்கள் அவதானம் என்கிறார்!
தடுப்பூசி போடும் பணி தற்போதைய வேகத்தில் நீடிக்குமானால் இனிமேல்நாட்டை முழுவதுமாக முடக்கவேண்டிய நிலை வரவே வராது என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஆனாலும் எதிர்வருகின்ற நாட்களை , சில வாரங்களை நாங்கள் மிகுந்த விழிப்போடு கடந்து செல்ல வேண்டியிருக்கும்.
பிரான்ஸின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வேரன் இவ்வாறு தொலைக்காட்சிச் செவ்வி ஒன்றில் உறுதிபடக் கூறியிருக்கிறார்.
பிரான்ஸின் கடல் கடந்த நிர்வாகத் தீவுகளில் கொரோனா வைரஸின் நான்காவது கட்ட அலை படுமோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் பெருநிலப்பரப்பிலும் அதுபோன்ற ஒரு நிலைமை ஏற்படலாம் என்று பரவலாக எச்சரிக்கப்படுகிறது கோடை விடுமுறை முடிவடைகின்றது. புதிய கல்வி ஆண்டுக்காகப்பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அதனால் இளவயதினரிடையே-தடுப்பூசி ஏற்றும் வயது வரம்புக்குக் கீழ் உள்ள சிறுவர்களிடையே-டெல்ரா வைரஸ் தீவிரமாகப் பரவவாய்ப்பு உள்ளது என்று தொற்றுநோயியலாளர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையிலேயே நாட்டின் சுகாதார நிலைவரம் தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர் பதிலளித்துள்ளார்.
அவர் கூறியதாவது :
இன்னும் சில தினங்களில் மருத்துவமனைகளில் நான்காவது அலை பற்றிய பேச்சுக்கள் எழக்கூடும். உண்மையில் நான்காவது அலை ஜூலை மாதத்திலேயே தொடங்கி விட்டது. நம் கையில் தடுப்பூசி ஆயுதம் இருந்த காரணத்தால்அதன் உச்சக் கட்ட தாக்குதலைத் தவிர்க்க அல்லது தாமதிக்க முடிந்துள்ளது.
நாட்டின் 80 வீதமான மக்கள் குறைந்தது ஒர் ஊசியையாவது பெற்றுள்ளனர். 65வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசி ஏற்றுவதை அடுத்த மாதம் ஆரம்பிப்பதற்கு எண்ணியுள்ளோம். அது விடயத்தில் நாட்டின் சுகாதார உயர் அதிகார சபையின்(La Haute autorité de Santé) பரிந்துரைக்காகக் காத்திருக்கின்றோம்.
மூன்றாவது தடுப்பூசித் திட்டத்துக்கான ஏற்பாடுகளைத் தொடங்குமாறுசுகாதார அதிகாரிகளுக்குப் பணித்துள்ளோம். – இவ்வாறு சுகாதார அமைச்சர்தெரிவித்துள்ளார்.
குமாரதாஸன். பாரிஸ்.