ஏவுகணைத் தாக்குதல் அச்சம்! தீப் பொறிகளை விசிறியவாறு தரையிறங்கும் விமானங்கள்!!
காபூல் சர்வதேச விமான நிலையத்தில்தரையிறங்கி ஏறும் மீட்பு விமானங்கள் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கங்களின் ஏவுகணை வீச்சுக்கு இலக்காகக் கூடிய ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் அங்கு இறங்கும் இராணுவமீட்பு விமானங்கள் ஏவுகணைத் தாக்குதலில் தப்புவதற்காகத் தீப்பொறிகளை விசிறியவாறு(dropping flares) குத்தாகத் தரையிறங்கும்(corkscrew landing) உத்திகளைப் பின்பற்றி வருகின்றன.விமானத்தின் வெப்ப அலைகளை நோக்கி ஈர்க்கப்படும் (heat-seeking) விமான எதிர்ப்பு ஏவுகணைகளில் இருந்து தப்புவதற்காகத் தீப்பொறிகளை வெளியே விசிறும் தொழில் நுட்பத்தைப்போர் விமானங்கள் பயன்படுத்துவது வழக்கம்.விமானத்தை நோக்கிச் செலுத்தரப்படுகின்ற ஏவுகணைகளைக் குழப்பத்தில் ஆழ்த்தித் திசை திருப்புவதற்காகவே இந்த தொழில்நுட்பம் (heat- seeking technology) இயக்கப்படுகிறது.
அதேபோன்று குத்தாகத் தரையிறங்கும் உத்தி என்பது விமானம் தாழப் பதியாமல் உயரத்தில் நின்ற நிலையிலேயே சடுதியாகக் கீழே ஓடு பாதை நோக்கிக் குத்தாக இறக்கப்படும் முறை ஆகும்.போர் விமானங்கள் போர்க் காலங்களில் இவ்வாறு தரையிறக்கப்படுவது வழக்கம்.
காபூல் வான் தளத்தில் தரையிறங்கும் விமானங்கள் இப்போது இந்தப் பாதுகாப்பு நடைமுறைகளுடன் இறக்கப்படுவதைக் காண முடிவதாக அங்குள்ள செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தலிபான்களின் முற்றுகைக்குள் உள்ளவிமான நிலையத்தில் வெளிநாட்டுப்படையினரும் நாட்டை விட்டு ஓடுகின்ற ஆப்கன் மக்களும் பெரும் எண்ணிக்கையில் திரண்டுள்ளனர். இந்தச் சந்தர்ப்பத்தைப் பார்த்து தலிபான்கள் அல்லது அவர்களோடு சேர்ந்து இயங்குகின்ற இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்கள்வான் தளத்தின் மீது அல்லது விமானங்கள் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோ பைடன் நிர்வாகத்தின் பாதுகாப்புஆலோசகர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பாரிஸிலிருந்து குமாரதாஸன்.