அமெரிக்க வீரர்கள் 12 பேர் உட்பட அறுபதுக்கும் அதிகமானோர் பலி!
எச்சரித்து சில மணி நேரத்தினுள் காபூல் விமான நிலையம் அருகே தற்கொலைக் குண்டு வெடிப்புகள்!
ஐ. எஸ். இயக்கம் உரிமை கோரல்!!
காபூல் விமான நிலையத்துக்கு வெளியேதொடராக இடம்பெற்ற இரண்டு பெரும் குண்டுத் தாக்குதல்களில் அமெரிக்கப் படைவீரர்கள் பலர் உட்பட அறுபதுக்கும்மேற்பட்ட ஆப்கானியர்கள் உயிரிழந்தனர் என அஞ்சப்படுகிறது.140 பேர்வரை காயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்டோரில் பன்னிருவர் அமெரிக்கப் படைவீரர்கள்எனத் தகவல் வெளியாகி உள்ளது.மேலும் 15 படை வீரர்கள் காயமடைந்துள்ளனர். விமான நிலையத்தின் அபே நுழைவுவாசலிலும் (Abbey gate), அருகே அமைந்துள்ள பரோன்ஸ் ஹொட்டேல் (Barons Hotel) பகுதியிலும் அடுத்தடுத்து இரண்டுகுண்டுகள் வெடித்தன. இரண்டுமே தற்கொலைத் தாக்குதல்கள் என நம்பப் படுகிறது. சனக் கூட்டத்துக்கு மத்தியில் குண்டுகள் வெடித்ததால் பெரும் பதற்றமும் குழப்பங்களும் ஏற்பட்டன.விமான நிலையத்தின் வாசல்களை அமெரிக்கப் படையினர் உடனடியாக மூடிவிட்டனர். மீட்பு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.
பென்ரகன் தகவல்களின்படி இரண்டு தற்கொலைதாரிகள் குண்டுகளை வெடிக்க வைத்துத் தாக்குதலை நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டுள்ளது.
காபூல் விமான நிலையத்தின் மீதும் விமானங்கள் மீதும் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளின்புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்து சில மணி நேரங்களில் இந்தக்குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன. அப்பகுதியில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று பென்ரகன்அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அங்கு இன்று நள்ளிரவு மூன்றாவது குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
காபூலில் இருந்து ஆட்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கான கால வரம்பு எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடைய உள்ளது. கடைசி நேர மீட்பு முயற்சிகளைப் பல நாடுகளும் முழு மூச்சில் முன்னெடுத்து வருகின்றன. பல நாடுகளது படையினர், வெளிநாட்டவர்கள், ஆப்கானியர்கள் உட்பட பல்லாயிரக் கணக்கானோர் விமான நிலையச் சூழலில் இன்னமும் திரண்டுள்ள நிலையிலேயே குண்டு வெடிப்புகள் இடம்பெற்றுள்ளன.
குண்டு வெடிப்புகளில் பிரெஞ்சுப் படையினருக்கோ, தூதரகப் பணியாளர்கள் மற்றும் பிரஜைகளுக்கோ பாதிப்புஏற்படவில்லை என்பதை அங்குள்ள பிரான்ஸின் தூதர் உறுதிப்படுத்தி உள்ளார். ஆப்கானியர்களை மீட்கும் வான்வழி நடவடிக்கைகளை பிரான்ஸ் வெள்ளிக்கிழமையுடன் நிறுத்திக் கொள்ளும் என்று பிரதமர் ஜீன் காஸ்ரோ தெரிவித்துள்ளார். குண்டு வெடிப்புகளைஅடுத்து ஜேர்மனி, டென்மார்க் போன்ற நாடுகளும் மீட்புப் பணிகளை நிறுத்துகின்றன.
ஐ. எஸ். ஐ. எஸ். அமைப்பில் இருந்து சிதறுண்டு தனித்து ஆப்கானிஸ்தான் அணியாகச் செயற்படுகின்ற ஒரு குழுவே இத்தாக்குதல்களை நடத்தியதாகக் கூறப்படுகிறது. ஜ.எஸ் அமைப்பின் பரப்புரை செய்தி ஏஜென்சி அமாக்(Amaq) குண்டுத்தாக்குதலுக்கு உரிமை கோரி செய்தி வெளியிட்டிருக்கிறது. தாக்குதலைக் கண்டித்திருக்கும் தலிபான் பேச்சாளர்நாற்பதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ISIS-K அல்லது ISIS-Khorasan என அழைக்கப்படுகின்ற குழு, ஐ.எஸ். இயக்கத்தின்பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இணைஅமைப்பு ஆகும். சிரியாவிலும் ஈராக்கிலும் ஐ. எஸ். அமைப்பு அழிக்கப்பட்டு விட்டதாகக் கூறப்படுகின்ற போதிலும் அதன் பிரிவுகள் வலுவான நிலையில் உலகின் பல பகுதிகளில் செயற்பட்டு வருகின்றன. ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இரு நாடுகளையும் மையப்படுத்தியதாக ஹோராசன் மாகாணத்தின் பெயரில் புதிய குழு செயற்படுகிறது (Islamic State Khorasan Province).
ஆப்கானிஸ்தானைத் தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் அங்கு இடம்பெற்றுள்ளமுதலாவது பயங்கரவாதத் தாக்குதல் இது ஆகும். குண்டு வெடிப்புகளில் ஒருடசின் படைவீரர்கள் உயிரிழந்திருப்பது பைடன் நிர்வாகத்துக்கு மேலும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. ஜோ பைடன் காபூல் மீட்பு நடவடிக்கைகளை வரலாற்றில் மிகக் கடினமானது என்று குறிப்பிட்டிருந்தார். அதில் உயிரிழப்புகள் தவிர்க்கப்படமுடியாதவை என்றவாறும் கருத்து வெளியிட்டிருந்தார்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய அரசாங்கத்தை நிறுவுவதற்கு முன்பாக நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்த ஐ. எஸ் தீவிரவாதிகள் முயற்சிக்கக்கூடும் என்றுஎச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமாரதாஸன். பாரிஸ்.