அமெரிக்காவுக்குப் பிறகு காபுல் விமான நிலையத்தில் பாதுகாப்பை ஏற்கத் திட்டமிட்ட துருக்கியும் பின்வாங்குகிறது.
அமெரிக்கா, நாட்டோ அமைப்பு மற்றும் மேற்கு நாடுகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தது முதலே காபுலின் விமான நிலையம் உட்பட்ட சில பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து அதன் மூலம் மேற்கு நாடுகளுக்கும் ஆப்கானிஸ்தானுக்கு “உதவ” தயாரென்று துருக்கியின் அதிபர் குறிப்பிட்டிருந்தார். ஆனால், எந்த வெளிநாட்டு இராணுவமும் தமது மண்ணில் இருக்க அனுமதிக்க முடியாதென்று தலிபான் இயக்கங்கள் அறிவித்திருந்தன.
நாட்டோ அமைப்பின் அங்கமாக இருக்கும் துருக்கியின் இராணுவத்தினரும் அங்கே அமெரிக்க இராணுவத்தினருடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். வியாழனன்று நடந்த தாக்குதல்களின் பின்னர் மீண்டும் அரைமனதுடன் தலிபான்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகிறது துருக்கி. சுமார் மூன்றரை மணி நேரமாகத் துருக்கிய – தலிபான் பேச்சுவார்த்தைகள் நடந்ததாக ஜனாதிபதி எர்டகான் குறிப்பிட்டிருக்கிறார்.
தலிபான்கள் காபுலுக்குள் நுழைந்த பின்னர் இதுவரை சுமார் 350 தனது இராணுவத்தினரையும், 1,400 பேரையும் துருக்கி அங்கிருந்து வெளியேற்றியிருக்கிறது. தொடர்ந்தும், காபுல் விமான நிலையத்தில் துருக்கியின் தற்காலிக வெளிநாட்டுத் தூதுவராலயம் இயங்கி வருகிறது.
முதலாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகள் முடிந்தபின் “நாங்கள் அவர்களுடன் பேசுவதன் மூலம் தான் இரண்டு பக்க எதிர்பார்ப்புக்களையும் பரிமாறிக்கொள்ள முடியும்,” என்று குறிப்பிட்டிருக்கும் எர்டகான் வேண்டுமானால் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைக்குத் தயாரென்று குறிப்பிடுகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்