உணவகங்களின் பணியாளருக்கு இன்று முதல் பாஸ் கட்டாயமாகிறது!
பிரான்ஸில் கடந்த ஜூன் 9 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்ட சுகாதாரப் பாஸ் படிப்படியாக பல பொது இடங்களில் கட்டாயமாக்கப்பட்டுவருகிறது. அதில் ஒரு கட்டமாக உணவகங்கள், அருந்தகங்களில் பணிபுரிகின்றவர்கள்(employés des bars et restaurants) பாஸ் வைத்திருக்கவேண்டியது இன்று திங்கட்கிழமை (ஓக. 30)தொடக்கம் கட்டாயமாக்கப்படுகின்றது.
கன்ரீன்கள் மற்றும் கார்பரேட் உணவகங்களினதும் (des sites de restauration d’entreprise, des cantines,) உணவைத் தயாரித்து விநியோகிக்கின்ற உணவகங்களது (des sites de vente à emporter) பணியாளர்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி உணவகப் பணியாளர்கள் உட்பட வேறு சில துறைகளைச் சேர்ந்த சுமார் 1.8 மில்லியன் பணியாளர்கள் பணியின் போது சுகாதாரப் பாஸ் வைத்திருப்பது அவசியமாகும்.
அதனைத் தொழில் வழங்குநர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. பாஸ் வைத்திருக்காதபணியாளர்கள் பரிசோதனையின் போதுமுதல் தடவை 135 ஈரோக்களையும் இரண்டாவது தடவை மீறுவோர் 1,500 ஈரோக்களையும் அபராதமாகச் செலுத்தநேரிடும். முப்பது நாட்களுக்குள் மூன்றுதடவைகள் கட்டுப்பாட்டை மீறினால் 3,750 ஈரோக்கள் அபராதத்துடன் ஆறு மாத கால சிறைத் தண்டனையையும்அனுபவிக்க நேரிடலாம்.
பாஸ் விதிகள் இன்று முதல் அமுலுக்குவந்தாலும் முதல் ஒரு வாரகாலத்துக்குபரிசோதனைகளில் தளர்வுப் போக்குஇருக்கும் என்று அரசாங்கப் பேச்சாளர் கப்ரியேல் அட்டால் தெரிவித்துள்ளார்.
இரண்டு தடுப்பூசிகளையும் ஏற்றியமைக்கான கியூஆர் கோட் சான்றிதழ், அல்லதுதொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக 72 மணி நேரத்தினுள் செய்யப்பட்ட வைரஸ் சோதனைச் சான்றிதழ், அல்லது ஆறுமாத காலப்பகுதிக்குள் தொற்று ஏற்பட்டு அதிலிருந்து மீண்டமைக்கான சான்றிதழ் ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்றைச் சுகாதாரப் பாஸாகப்பயன்படுத்த முடியும்.
உணவகங்கள், அருந்தகங்களுக்கு வருகின்ற வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே பாஸ் கட்டாயமாக்கப்பட்டிருப்பது தெரிந்ததே.போக்குவரத்துத்துறைப் பணியாளர்கள் உட்பட வேறு பல இடங்களில் தொழில் புரிவோருக்கும் இன்று முதல் சுகாதாரப்பாஸ் கட்டாயமாக்கப்படுகிறது.
குமாரதாஸன். பாரிஸ்