பிட்கொயினை நாணயமாக அங்கீகரிக்கும் உலகின் முதலாவது நாடாகியது எல் சல்வடோர்.
பிட்கொய்ன் எனப்படும் டிஜிடல் நாணயம் சர்வதேச ரீதியில் பெரும்பாலான நாடுகளில் எதிர்ப்புக்கே உள்ளாகிவருகிறது. எந்த ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலும் இல்லாது கண்ணுக்குத் தெரியாத தனி உலகத்தில் புழங்கிவரும் அந்த நாணயத்தை முதன் முதலாக எல் சல்வடோர் தனது நாட்டில் அங்கீகரித்திருக்கிறது.
பிட்கொயினை ஒரு சட்டபூர்வமான நாணயம் என்று ஏற்றுக்கொள்வதன் மூலம் தனது நாட்டு மக்கள் பலருக்கு வங்கிவசதிகள் கிடைக்கும் என்று நம்புகிறார் நாட்டின் ஜனாதிபதி நயீப் புக்கேலெ. அத்துடன் வெளிநாடுகளில் வேலை செய்யும் தனது நாட்டு மக்கள் சுமார் 400 மில்லியன் டொலர்களை வருடாவருடம் இலகுவாக நாட்டுக்கு அனுப்புவதற்கும் உதவுமென்கிறார்.
எல் சல்வடோர் மக்கள் அமெரிக்க டொலர்களையே தமது நாணயமாகக் கடந்த 20 வருடங்களாகப் பாவித்து வருகிறார்கள். அவர்களிடையே எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பீட்டில் பிட்கொயினை அங்கீகரிப்பது விரும்பப்படவில்லை.
ஆயினும், திங்களன்றே தனது நாடு உலகின் முதலாவது நாடாக அந்த நாணயத்தை வாங்கப்போவதை விளம்பரம் செய்தார் நயீப் புக்கேலெ. அத்துடன், 400 பிட்கொயின்களை 21 மில்லியன் டொலர்களுக்குக் கொள்வனவு செய்ததுடன் மேலும் கொள்வனவு செய்யும் திட்டமிருப்பதையும் தெரிவித்தார்.
சில மாதங்களுக்கு முன்னரேயே எல் சல்வடோரின் புழக்கத்துக்கும், அரச, நகர கொள்வனவு, விற்பனைக்கும் அமெரிக்க டொலர்களுக்குப் பதிலாக பிட்கொயினைப் பாவிக்கலாம் என்று அரசு முடிவெடுத்து அறிவித்திருந்தது. நாட்டின் வெவ்வேறு பாகங்களில் 200 பிட்கொயின் கொள்வனவு இயந்திரங்களை ஸ்தாபிக்கவும் நயீப் புக்கேலெ முடிவு செய்திருக்கிறார். அந்த இயந்திரங்களைப் பாதுகாக்க இராணுவத்தினர் நியமிக்கப்படுவார்கள். அந்த நாணயத்தைப் பாவிப்பவர்களுக்கு 30 அமெரிக்க டொலர்களை இலவசமாகக் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
ஏப்ரல் மாதமளவில் தனது மிக அதிக விலையில் விற்கப்பட்ட பிட்கொயின் ஜூன் மாதமளவில் தனது பாதி பெறுமதியை இழந்தது. அதே போன்ற நிலையே தொடர்ந்தும் நீடிக்கிறது. எந்தெந்தக் காரணங்களால் பெறுமதி ஏற்படுகிறது என்பது தெளிவில்லாத பிட்கொயின் எவராலும் ஒழுங்குபடுத்த முடியாதது.
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் எல் சல்வடோரின் அபிவிருத்தி வங்கிகள் போன்றவை எல் சல்வடோர் அரசின் பிட்கொயினை ஏற்றுக்கொள்ளும் முடிவைப் பற்றி எச்சரித்திருக்கின்றன. போதை மருந்து, மனிதக் கடத்தல்காரர்கள் போன்ற சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடுகிறவர்கள் தமது கொடுக்கல் வாங்கல்கள் வெளியே தெரியாமலிருக்க பிட்கொயினைப் பயன்படுத்துவதாகப் பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்