இந்தியாவின் சகல மதத்தினரிடையேயும் பிள்ளை பெறுதல் குறைந்திருக்கிறது.

இந்தியாவின் முக்கிய மதத்தவர்களைப் பொறுத்தவரை தொடர்ந்தும் முஸ்லீம்களே அதிகளவில் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள். அதையடுத்து அதிக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்பவர்கள் இந்துக்கள். ஜைன மதத்தைச் சேர்ந்தவர்களே மிகக் குறைந்தளவில் பிள்ளைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்று சமீபத்தைய புள்ளிவிபரங்கள் (PEW research) குறிப்பிடுகின்றன.  

1992 – 2015 வரையுள்ள காலத்தில் முஸ்லீம்கள், இந்துக்கள், கிறீஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், ஜைன மதத்தினர் உட்பட்ட எல்லோரிடையுமே பிள்ளைப் பெறுதல் விகிதம் கணிசமாகக் குறைந்திருக்கின்றது. ஆனால், தொடர்ந்து அவர்களிடையே முஸ்லீம்களே அதிகளவில் பிள்ளை பெற்றுக்கொள்கிறார்கள்.

இந்தக் கால இடைவெளியில் இந்தியப் பெண்களின் பிள்ளை பெறுதல் விகிதம் பெருமளவு குறைந்திருக்கிறது. 1995 இல் சராசரியாக 4.4 பிள்ளைகளைப் பெற்றுக்கொண்ட முஸ்லீம் பெண்கள் 2015 இல் 2.6 பிள்ளைகளையே பெற்றுக்கொள்கிறார்கள்.

1995 இல் சராசரியாக ஒரு இந்துப் பெண் 3.3 பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டாள். 2015 இலோ அது 2.1 பிள்ளைகளாகக் குறைந்திருக்கிறது. 1995 இல் ஒரு முஸ்லீம் பெண், இந்துப் பெண்ணை விட சராசரியாக 1.1 பிள்ளைகளை அதிகமாகப் பெற்றுக்கொண்டாள். அந்த இடைவெளி 2015 இல் 0.5 ஆகக் குறைந்திருக்கிறது.

1951 இல் சுதந்திர இந்தியாவில் முதல் தடவையாகக் குடிமக்கள் தொகை கணக்கிடப்பட்டது. முஸ்லீம் பெண்களிடையே பிள்ளைப் பெறுதல் அதிகமாக இருந்ததால் அதன் பின்னைய காலத்தில் முஸ்லீம்களின் சனத்தொகை இந்தியாவின் மற்றைய மதத்தவரை விட வேகமாக வளர்ந்தது. ஆனால், ஏற்பட்டிருக்கும் பிள்ளைப் பெறுதல் குறைதலால் இப்போது அவர்களுடைய எண்ணிக்கை அதிகரிப்புப் பெரியதாக இல்லை என்கிறது புள்ளிவிபரங்கள்.

1951 ம் ஆண்டுப் புள்ளி விபரங்களின்படி இந்தியாவின் 84.1 விகிதத்தினர் இந்துக்கள். முஸ்லீம்கள் 9.8 விதத்தினராக இருந்தார்கள். 2011 சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி அவர்கள் இந்தியாவின் 14.2 விகிதமானவர்களாக இருக்கிறார்கள். இந்துக்களின் விகிதம் 2011 இல் 79.8 விகிதமாகும். அதாவது இந்தியாவின் மொத்தச் சனத்தொகையில் முஸ்லீம்கள் 4.4 விகிதத்தால் அதிகமாகியிருக்கிறார்கள். இந்துக்கள் 1951 இலிருந்து 2011 வரை 4.3 விகிதத்தால் குறைந்திருக்கிறார்கள்.

சிறுபான்மையினரான கிறீஸ்தவர்கள், சீக்கியர்கள், ஜைனர்கள், புத்த சமயத்தினர் 1951 இல் இந்தியச் சனத்தொகையின் 6 விகிதமானவர்களாக இருந்தார்கள். அவர்களிடையே 1951 லிருந்த  அதே விகிதாசாரமே 2011 லும் இருக்கிறது. 

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *