வெறும் அறிவிப்புகள் வேண்டாம், செயல் தான் முக்கியம் காலநிலை மாநாட்டில் பேச்சால் அசத்திய தமிழ் சிறுமி வினிஷா(வீடியோ)
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரத்தில் நடைபெறும் காலநிலை Cop26 நாடுகளின் தலைவர்கள் முன்னிலையில், காலநிலை தொடர்பான எச்சரிக்கைகள் தொடர்பில் வெறும் அறிவிப்புகள் மட்டும் போதாது, செயற்பாடுகளில் இறங்க வேண்டும் என 14 வயதுடைய தமிழ் சிறுமி வினிஷா உமாசங்கரின் பேச்சு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமி வினிஷா உமாசங்கர் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விடயங்களை கவனத்திலெடுத்து தனது சிறு வயதிலேயே சூரியசக்தியால் மின்சக்தியைப்பெற்று இயங்கும் இஸ்திரி வண்டியை உருவாக்கி உலக தொழிநுட்ப வல்லுனர்களின் கவனத்தை ஈர்த்தவராவார். இங்கிலாந்தின் இளவரசர் வில்லியம் தொடங்கிய எர்த்ஷொட் பரிசு (Earthshot Prize) என்ற விருதுக்கான இறுதிப்போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் வினிஷாவும் ஒருவராவார்.
காலநிலை cop26 உலக தலைவர்கள் மாநாட்டிலும் வினிஷாவுக்கு உரையாற்ற சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது. அதன்படி “தூய்மையான தொழில்நுட்பம்” என்ற விடயத்தலைப்பில் வினிஷா உரையாற்றும் போது ” பேசுவதை நிறுத்திவிட்டு செயற்பட தொடங்குங்கள்” என்று அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
உலக நாடுகளின் தலைவர்கள் பழைய வாதவிவாதங்கள், நடைமுறைகள் பற்றி மீளவும் பேசிக்கொண்டிருப்பதை நிறுத்த எத்தனிக்க வேண்டும்.புதிய எதிர்காலத்திற்கான புதிய பார்வை எதிர்கால சந்ததிக்கு தேவை. எங்கள் எதிர்காலத்தை வடிவமைக்க உங்கள் நேரத்தையும் பணத்தையும் முயற்சியையும் எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும் என்று அவர் உரையில் குறிப்பிட்டது பலரின் சிந்தனைகளை தட்டிவிட்டுள்ளது.
நான் இந்தியாவைச் சேர்ந்த பெண் மட்டுமல்ல. பூமியைச் சேர்ந்த பெண்ணும் தான். நான் அப்படி இருப்பதில் தான் பெருமைப்படுகிறேன் என்பதையும் அழுத்தமாகக்குறிப்பிட்டார்.
எதிர்கால சந்ததியினரின் வாழ்வை கருத்தில்கொண்டு காலநிலைமாற்றம் என்ற விடயம் எவ்வளவு முக்கியமானது என்பதை இந்த சிறுமியின் உரையினால் உலகத்தலைவர்களுக்கு பேச்சளவிலும் ஒப்பந்தகளில் கையெழுத்துகளை மட்டும் இட்டுவிட்டு கடந்துவிடக்கூடாது என்பதை நிச்சயம் உணர்த்தியிருக்கும்.
சிறுமியின் உரையை மேலே உள்ள இணைப்பில் பார்க்கலாம்.