ஆபிரிக்கக் கோப்பைக்கான மோதலைப் பார்க்க வந்தவர்களிடையே நெரிபாடு, ஆறு பேர் உயிரிழந்தனர்.

50 வருடங்களுக்குப் பின்னர் முதல் தடவையாக ஆபிரிக்க உதைபந்தாட்டக் கோப்பைக்கான போட்டிகள் கமரூனில் நடக்கின்றன. திங்களன்று அங்கே கொமோரோஸ் நாட்டின் அணியுடன் மோதியது கமரூன். தலைநகரான யாவுண்டேயின் ஒலிம்பே விளையாட்டரங்கில் அந்த மோதல் நடைபெற்றது. அந்த மோதலைப் பார்க்க வந்தவர்கள் நெரிபட்டதில் பலர் காயப்பட்டதாகவும் ஆறு பேர் இறந்ததாகவும் தெரியவருகிறது. 

கொரோனாத்தொற்றுக் கட்டுப்பாடுகளையொட்டி 60,000 பேரைக் கொள்ளக்கூடிய அரங்கில் 80 % பார்வையாளர்களே அனுமதிக்க இடமிருந்தது. ஆனால், அங்கே 50,000 பேர் முட்டி மோதியதால் நிலைமை கட்டுப்பாடில்லாமல் போனது. 2019 இல் கமரூன் ஆபிரிக்கக் கோப்பைக்கான போட்டிகளை நடாத்தவிருந்து அது பறித்து எகிப்துக்குக் கொடுக்கப்பட்டது. அதன் காரணம் நாட்டின் அரங்குகளின் பாதுகாப்பின்மையே. 

 குறிப்பிட்ட ஒலிம்பே அரங்கின் மோசமான நிலைமையே 2019 இல் கமரூனில் போட்டிகள் நடக்க அனுமதி மறுக்கப்படக் காரணமாகும். விபத்து நடந்த அதே அரங்கில் கோப்பைக்கான கடைசி மோதல் உட்பட  மேலும் மூன்று மோதல்கள் நடக்கவிருக்கின்றன. யாவுண்டே களியாட்ட அரங்குகளில் ஞாயிறன்று தீவிபத்துக்கள் உண்டாகி 17 பேர் இறந்த பின்னர் நடந்த அரங்கு விபத்து கமரூனின் பாதுகாப்புக்கு மேலும் களங்கத்தை உண்டாக்கியிருக்கிறது.

தனது மோதலில் 2 – 1 என்று வெற்றியெற்று காலிறுதிப் போட்டிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது கமரூன். அரங்கு விபத்தில் காயமடைந்து 40 பேருக்கும் அதிகமானோ பக்கத்து மருத்துவசாலைகளில் சேவையை நாடியதாகக் குறிப்பிடப்படுகிறது. விபத்தில் இறந்தவர்கள் 6 பேருக்கும் அதிகமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அரங்கின் பாதுகாப்பு உயரதிகாரிகள் உண்மையான இலக்கம் என்னவென்று குறிப்பிட மறுத்து வருகிறார்கள்.

சாள்ஸ் ஜெ. போமன்