ஐ. ஒன்றியத் தலைமையை பிரான்ஸ் ஏற்பதை ஒட்டி புதிய 2 ஈரோ நாணயம்.
ஆறு மாதங்களுக்கு ஒருதடவை சுழற்சி முறையில் பகிரப்பட்டு வருகின்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பு ஜனவரி முதலாம் திகதி பிரான்ஸிடம் வருகிறது. அதனைக் குறிக்குமுகமாக புதிய இரண்டு ஈரோ நாணயக் குற்றி ஒன்றை பிரான்ஸ் வடிவமைத்துள்ளது. ஜனவரி முதலாம் திகதி புதிய நாணயம்புழக்கத்துக்கு விடப்படும்.
1958 இல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவி பிரான்ஸின் பொறுப்புக்கு வருவது இது 13 ஆவது முறையாகும். கடைசியாக 2008 ஆம் ஆண்டு நிக்கலஸ் சார்க்கோஷியின் பதவிக் காலத்தில் தலைமைப் பொறுப்பை பிரான்ஸ் பெற்றிருந்தது.
ஆரம்பத்தில் குறைவாக இருந்த ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளது எண்ணிக்கை தற்சமயம் 27 ஆகும்.எனவே உறுப்பு நாடுகளிடையே ஆறாறு மாதங்கள் தலைமைப் பதவி சுற்றிச்சுழன்று ஒரு நாட்டிடம் மீண்டும் வருவதற்குப் 13 ஆண்டுகள் எடுக்கும்.
பிரான்ஸ் ஒன்றியத்தில் வலுவான நாடு என்ற வகையில் அது தலைமைப் பதவியை ஏற்பது பலவித எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. தன்னை ஓர் ஜரோப்பியவாதியாகக் காட்டிக் கொள்கின்ற அதிபர் எமானுவல் மக்ரோனின்பதவிக் காலத்தில் – அந்தப் பொறுப்புபிரான்ஸின் கைக்கு வருவதும், அதேகாலப் பகுதியில் நாட்டின் அதிபர் தேர்தல் நிகழ இருப்பதும் அதற்கு அரசியல் ரீதியில் முக்கியத்துவத்தை அதிகரித்துள்ளது.
பிரான்ஸின் தலைமையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலத் திட்டங்கள் என்ன என்பது பற்றி மக்ரோன் செய்தியாளர் மாநாட்டில் விளக்கியுள்ளார். உறுதி, இறைமை ஐக்கியம் கொண்ட ஐரோப்பாவை நிறுவும் அழைப்பை அப்போது அவர் வெளியிட்டார். குடியேறிகள் விடயத்தில் உறுப்பு நாடுகளிடையே ஒருங்கிணைந்த செயற்பாடுகளை வலியுறுத்திய அவர், ஒரு நாடு அதன் எல்லையில் நெருக்கடியைச்சந்திக்கின்ற சமயத்தில் அதற்கு ஏனைய நாடுகள் விரைந்து உதவக் கூடிய திட்டம்ஒன்று அவசியம் என்று முன்மொழிந்தார். ஒன்றியத்தின் எல்லைகளைப் பலப்படுத்தும் நோக்குடன் ஷெங்கன் (Schengen) வலயத்தை மறுசீரமைப்புச் செய்கின்ற யோசனையையும் அவர் வெளியிட்டார்.-
குமாரதாஸன். பாரிஸ்.