பிரான்ஸ் பாராளுமன்றம் விளையாட்டுகளில் ஹிஜாப் அணிவதை எதிர்த்து வாக்களித்தது.

Les Republicains  என்ற வலதுசாரிக் கட்சியினரால் பிரெஞ்ச் பாராளுமன்றத்தில் வைக்கப்பட்டு 160 – 143 என்ற வாக்கு வித்தியாசத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானமொன்றின்படி விளையாட்டுப் போட்டிகளில் ஜிஜாப் அணிதல் தடுக்கப்படும். பிரென்ச் அரசு அதை எதிர்த்தாலும் பெரும்பான்மை செனட்டர்கள் அதற்கு ஆதரவளித்திருக்கிறார்கள்.

நடுநிலை என்பது விளையாட்டுப் போட்டிகளில் அவசியம். ஹிஜாப் அணிந்து விளையாடுபவரின் பாதுகாப்புக்கு அது இடைஞ்சலானது ஆகிய காரணங்களைக் காட்டி வலதுசாரிக் கட்சி அந்தப் பிரேரணையைச் செனட் சபையில் முன்வைத்திருந்தது. ஒவ்வொரு குடிமகனுக்கும் தனக்கு விருப்பமான மதத்தைக் கைக்கொள்ள உரிமையிருக்கிறது. ஆனால், தமக்கிடையேயிருக்கும் வித்தியாசங்களை முன்னிறுத்துதல் தடுக்கப்படவேண்டும் என்று செனட்டர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

பிரான்ஸின் செனட் சபை, கீழ்ச்சபை ஆகியவைகளிலிருந்து பிரதிநிதிகள் சிலர் தெரிவு செய்யப்பட்டு “விளையாட்டுப் போட்டிகளில் ஹிஜாப் தடை,” சட்டம் விபரமாக எழுதப்படும். எனவே, அதில் மாறுதல்களைக் கொண்டுவருவது தொடர்ந்தும் சாத்தியமானது என்று குறிப்பிடப்படுகிறது.

பிரான்ஸில் சமீப வருடங்களில் நடந்த இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதல்களின் பின்னர் பிரான்ஸ் அரசு நாட்டின் கோட்பாடு, அடையாளம் என்பவை எல்லாவருக்கும் பொதுவாக இருக்கக்கூடியதாகச் சட்டங்கள், கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படவேண்டும் என்று தீர்மானித்தது.   

2024 இல் பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் மேற்கண்ட சட்டம் அமுலுக்கு வருமா என்பது பற்றி அவ்வமைப்பின் அதிகாரிகளால் இப்போது பதில் கூற முடியவில்லை. உதைபந்தாட்டப் போட்டிகளிலும், அதன் உத்தியோகபூர்வ நிகழ்வுகளிலும் ஹிஜாப் அணிதல் பிரான்ஸில் ஏற்கனவே தடுக்கப்பட்டிருக்கிறது.

சாள்ஸ் ஜெ. போமன்