இத்தாலிய ஜனாதிபதித் தேர்தல் நாட்டில் புதிய அரசியல் நிலநடுக்கத்தை ஏற்படுத்தலாம்.
இன்று திங்களன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட இத்தாலியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுசேர்ந்து நாட்டின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கவிருக்கிறார்கள். சில நாட்களுக்கு முன்புவரை அத்தேர்தலில் குதித்ததன் மூலம் நாட்டின் கௌரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்துவாரா என்று விமர்சிக்கப்பட்ட பெர்லொஸ்கோனி கடைசிக் கட்டத்தில் தான் வேட்பாளரல்ல என்று பின்வாங்கிக்கொண்டார். ஆயினும் கூட இத்தேர்தல் நாட்டில் அரசியல் ஸ்திரத்தை ஆட்டிவைக்கலாம் என்று கருதப்படுகிறது.
பதவியிலிருக்கும் ஜனாதிபதி மத்தரெல்லா தான் மேலுமொரு தவணை அப்பதவியிலிருக்கத் தயாராக இல்லை என்று குறிப்பிட்டுவிட்டார். எதிர்பார்க்கப்பட்டது போலவே நாட்டின் பிரதமர் மாரியோ டிராகி ஜனாதிபதி வேட்பாளராகியிருக்கிறார். அரசியலுக்கு வெளியேயிருந்து வந்து ஒரு வருடமாக அரசாங்கத்தை உடையவிடாமல் நடத்திவரும் மாரியோ டிராகிக்கு ஆதரவு பலமாக இருக்கிறது.
மாரியோ டிராகி ஜனாதிபதியானால் நாட்டின் புதிய பிரதமர் யார் என்பது மிகப் பெரிய கேள்வியாக மாறும். அதற்கான தகுந்த வேட்பாளரைத் தெரிந்தெடுத்து ஒரு அரசாங்கத்தை அறிமுகப்படுத்துவது நாட்டில் பெரும் அரசியல் நிலநடுக்கத்தை ஏற்படுத்தாம் என்று அஞ்சப்படுகிறது. காரணம் பாரளுமன்றத்தில் எந்த ஒரு கட்சிக்கும் தனியாக மட்டுமன்றி கூட்டாக ஒரு அரசாங்கத்தைத் தமது முயற்சியால் அமைப்பது முடியாத காரியம் என்று கருதப்படுவதாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்