கத்தலோனியாவில் தனி நாடு கேட்பவர்களின் தலைவர்களின் சட்டப் பாதுகாப்பை ஒன்றியப் பாராளுமன்றம் நீக்கியது.
தற்போது ஸ்பெயினில் ஒரு சுயாட்சி பெற்ற மாநிலமாக இருக்கும் கத்தலோனியாவைத் தனிநாடாக்கக் கோரி ஒரு சாரார் நீண்ட காலமாகவே போராடி வருவது தெரிந்ததே. அவர்களின் தலைவர்களான கார்லோஸ் புய்டமொன், டொனி பொமின், கிளாரா பொன்சட்டி ஆகியோர் ஐரோப்பிய ஒன்றியப் பாராளுமன்ற உறுப்பினர்களாகும்.
புய்டமோன் 2017 இல் கத்தலோனியாவில் தனிநாடு வேண்டுமா என்று கேட்டு ஸ்பெயின் அரசின் அதிகாரத்தை மீறித் தேர்தல் நடாத்தினார். அது தண்டனைக்குரிய குற்றம் என்பதால் ஸ்பெயின் அவரை நீதியின் முன் நிறுத்தித் தண்டிக்க விரும்புகிறது. அப்படியான ஒரு வழக்கில் அவருக்கு நீண்ட காலச் சிறைத்தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே புய்டமோன் ஸ்பெயினிலிருந்து தப்பியோடி பெல்ஜியத்தில் அரசியல் தஞ்சம் பெற்றிருக்கிறார். ஸ்பெயின் அவருக்காக ஒரு சர்வதேசக் கைது உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அவரது நிலைமையை பெல்ஜிய நீதிமன்றத்தில் பெல்ஜியம் பரிசீலித்ததில் ஸ்பெயினில் அவருக்கு ஒரு நியாயமான வழக்கு விசாரணை நடக்காது என்று கூறி அவரை பெல்ஜியத்திலேயே வாழ அனுமதித்திருக்கிறது.
புய்டமோன் ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினராக முன்னர் தான் அவருடைய தனி நாடு கோரும் தேர்தல் நடைபெற்றது. எனவே, ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் வழக்குப் பாதுகாப்பு உரிமையை அப்பாராளுமன்றம் நீக்கியிருக்கிறது. அதனால், அவரை ஸ்பெயினில் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவது சாத்தியமாகியிருப்பதாக ஸ்பெயின் கருதுகிறது. எனவே மீண்டும் அவர்கள் பெல்ஜியத்திடம் புய்டமோனைத் தம்மிடம் ஒப்படைக்கும்படி கோரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்