ஈரானையும், கத்தாரையும் இணைக்கும் நிலக்கீழ் எரிவாயுக்குளாய் நிறுவும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது.

டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் முறிக்கப்பட்ட உலக நாடுகள் + ஈரான் அணுசக்திப் பரிசோதனை ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும் பேச்சுவார்த்தைகள் ஆஸ்திரியாவில், வியன்னாவில் மெதுவாக வெற்றியை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. அதே சமயம் இன்னொரு முனையில், எரிவாயு ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடான ஈரான் கத்தாருடன் சேர்ந்து அதன் வர்த்தகத்தை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது.

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹீம் ராய்சி கத்தாரின் அரசனுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தத் திங்களன்று கத்தாருக்கு வந்திருக்கிறார். கூடவே அவரது முக்கிய அமைச்சர்களும் உயரதிகாரிகளும் வந்திருப்பதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

தனது இரண்டு நாள் விஜயத்தில் கத்தாருடன் நாலு ஒப்பந்தங்களைக் கைச்சாத்திடவிருக்கிறார் ராய்சி. அவைகளில் முக்கியமாகக் கருதப்படுவது இரண்டு நாடுகளையும் இணைக்கும் நீருக்கிடையே அமைக்கப்படவிருக்கும் எரிவாயுக் குளாய் ஆகும். அதைத் தவிர இரண்டு நாடுகளுக்கும் இடையேயான நீர்ப்போக்குவரத்து வர்த்தகம் மற்றும் விமானப் போக்குவரத்து போன்றவை பற்றியும் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும் என்று ஈரானின் அமைச்சர் ரொஸ்தம் கஸெமி தெரிவித்தார்.

வியன்னாவில் நடந்துவரும் அணுசக்திப் பரிசோதனை பற்றிய ஒப்பந்தம் பற்றி ஈரானியப் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டிருக்கிறது. அவ்வொப்பந்தத்தில் ஈரான் மீண்டும் சேர்ந்துகொள்வதானால் முன்பு டிரம்ப் செய்தது போல மீண்டுமொரு தலைவர் தன்னிஷ்டத்துக்கு அதை முறிக்கும் சந்தர்ப்பம் இருக்கலாகாது என்று பாராளுமன்றத்தில் சுட்டிக் காட்டப்பட்டது.

அணுசக்திப் பரிசோதனை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் பட்சத்தில் கத்தாருடன் இணைந்து ஈரான் மீண்டும் சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட கத்தாருடனான ஒப்பந்தங்கள் உதவும். அமெரிக்காவின் தடைகளை ஒதுக்கிவிட்டு ஈரான் தனது தயாரிப்புக்களைக் கத்தார் வழியாகச் சர்வதேசச் சந்தையில் விற்கலாம்.

சாள்ஸ் ஜெ. போமன்