இஸ்ராயேல் தனது வெளிவிவகாரக் காரியாலயமொன்றை மொரொக்கோவில் திறந்துவைத்தது.
மொரோக்கோவுக்கு முதன் முதலாக உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட இஸ்ராயேலின் வெளிநாட்டமைச்சர் யாயிர் லபிட் “சரித்திர நிகழ்வு, மொரோக்கோ அரசுடன் இணைந்து இஸ்ராயேல் இங்கே ஒரு பிரதிநிதித்துவ காரியாலயத்தைத் திறந்திருக்கிறது,” என்று வியாழனன்று டுவீட்டினார். தலை நகரான ரஹாத்தில் அக்காரியாலயம் திறந்து வைக்கப்பட்ட நிகழ்ச்சியில் மொரொக்கோவின் அமைச்சர் மோச்சின் ஜஸூலியும் பங்குபற்றினார்.
https://vetrinadai.com/news/kosovo-israel-agreement/
மொரொக்கோவின் மன்னர் மொஹம்மது VI ஐ இஸ்ராயேலுக்கு விஜயம் செய்யும்படி 2020 இல் முன்னாள் பிரதமர் நத்தான்யாஹு முன்வைத்த வேண்டுகோளை மீண்டும் யாயிர் லபிட் புதுப்பித்தார்.
மொரொக்கோவுடன் சேர்ந்து இஸ்ராயேலும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தைச் சுபீட்சமாகவும், அமைதியாகவும் திகழ உதவ அமெரிக்கா சகல வழிகளிலும் உதவும் என்று அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் பிளிங்கன் அந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
அதற்கு முதல் நாளன்று இரண்டு நாட்டு அரசியல் உயர்மட்டப் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்து அரசியல் பரிமாற்றங்கள், வான்வெளி, கலாச்சாரம் ஆகியவைகளுக்காகத் தமக்கிடையேயான ஒப்பந்தங்களைக் கைச்சாத்திட்டார்கள். மொரொக்கோவின் வர்த்தகத் தலைநகரான கஸாபிளாங்காவில் யாயிர் லபிட் அங்கிருந்த சினகூகாவுக்கு விஜயம் செய்தார்.
அராபிய நாடுகளின் மிகப்பெரிய யூத சமூகம் மொரொக்கோவில் வாழ்வது குறிப்பிடத்தக்கது. சுமார் 3,000 யூதர்கள் அங்கே வாழ்ந்து வருகிறார்கள். மிகப்பெரிய ஒரு சமூகமாக இருந்த அதன் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது. மொரொக்கோவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் உறவுகளான சுமார் 700,000 யூத சமூகத்தினர் இஸ்ராயேலில் வாழ்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்