பால்டிக் கடற்பிராந்தியத்தில் இராணுவ நகர்வுகள் அதிகரித்திருக்கின்றன.
ரஷ்யாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான உறவு, உக்ரேன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு பற்றிய பேச்சுவார்த்தைகளின் பின்பும் சகஜமானதாகத் தெரியவில்லை. கடந்த வாரத்தில் நடந்த பன்முகப் பேச்சுவார்த்தைகளின் முடிவுகள் என்னவென்பது இன்னும் தெளிவாகவில்லை.
இந்த நிலையில் பால்டிக் கடற்பிராந்தியத்தில் இராணுவப் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. பால்டிக் கடலிலிருக்கும் சுவீடனுக்குச் சொந்தமான தீவான கொத்லாந்திற்கு [Gotland]சுவீடன் தனது இராணுவத்தை அனுப்பியிருக்கிறது. 120 இராணுவ வீரர்கள் தேவையான இராணுவத் தளபாடங்களுடன் கொத்லாந்துக்குச் சென்று அத்தீவில் நடமாடி வருகிறார்கள். பாதுகாப்பு நடவடிக்கையில் சுவீடன் இறங்கத் தயார் என்று காட்டவே அந்த நகர்வைச் செய்ததாக சுவீடனின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.
அடுத்த கட்டமாக நாட்டோ அமைப்பு தனது போர்க்கப்பலொன்றைச் சுவீடனின் தெற்குப் பாகத்தில் பால்டிக் கடலில் பாதுகாப்புக்கு அனுப்பியிருக்கிறது. HNLMS Rotterdam என்ற அந்த நெதர்லாந்துப் போர்க்கப்பல் சுவீடன், டென்மார்க் ஆகிய நாடுகளினருகில் பால்டிக் கடலில் நிலைமையை அவதானித்து வருவதாக நாட்டோவின் அறிக்கை குறிப்பிடுகிறது.
அதேசமயம், கடந்த வார ஆரம்பத்தில் பால்டிக் கடலுக்குள் நுழைந்த ரஷ்யாவின் மூன்று இராணுவக் கப்பல்கள் அக்கடற்பிரதேசத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருப்பதாக அவதானிக்கப்பட்டிருக்கின்றது. அவை இராணுவத்தினரை நிலத்துக்குக் கொண்டுசெல்ல உதவும் கப்பல்களாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்