ஆர்மீனியாவின் தலைவர் நிக்கோல் பாஷின்யான் நாட்டின் இராணுவம் அரசைக் கவிழ்க்க முயல்வதாகக் குற்றஞ்சாட்டுகிறார்.

நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடிகளைத் திசைதிருப்பும் முயற்சியாக ஆர்மீனியாவின் பிரதமர் நாட்டின் இராணுவ உயர் தளபதியைப் பதவியிலிருந்து விலக்கியிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது. அதனால், கோபமடைந்த இராணுவத்தினர் பிரதமர் பதவிவிலகவேண்டுமென்று கோருகிறார்கள்.

ஆர்மீனியாவின் பகுதியான நகானோ கரபாச் பிராந்தியம் சம்பந்தமாக அயல்நாடான ஆஸார்பைஜானோடு நவம்பரில் நடத்திய போரில் ஏற்பட்ட தோல்விக்குக் காரணம் பிரதமரே என்று குறிப்பிட்டு எதிர்க்கட்சியினரும் நிக்கோல் பாஷின்யானைப் பதவி விலகும்படி கோரிவருகிறார்கள். ஒரு பக்கம் இராணுவத்தினர் முழு அரசாங்கத்தையும் பதவி விலகும்படி கோர, பிரதமர் பதவி விலகவேண்டுமென்று கோரி எதிர்க்கட்சியினர் பேரணிகளை நாடெங்கும் நடத்தி வருகிறார்கள்.

அதற்குப் பதிலடியாக பாஷின்யான் இராணுவம் அரசைக் கவிழ்க்கத் திட்டமிடுவதாகக் குற்றஞ்சாட்டித் தனது ஆதரவாளர்களை வரவழைத்துத் தலைநகரான யெரவானில் ஊர்வலம் நடத்தினார்.

இவைகளால் நாட்டின் அரசியல் நிலைமை ஸ்திரமிழந்திருப்பதாக ரஷ்யா விசனப்படுகிறது. நகானோ கரபாச் பிராந்தியத்தியதையும் அதைச் சுற்றியிருக்கும் பிரதேசத்தையும் விட்டுக்கொடுக்கவேண்டிய நிலைக்குள்ளான ஆர்மீனியாவில் ரஷ்யா தனது இராணுவத் தளத்தை வைத்திருக்கிறது. தவிர நகானோ கரபாச் பிராந்தியத்தில் அமைதிப்பணியிலும் ரஷ்ய இராணுவம் செயற்படுகிறது. 

சகல தரப்பாரும் ஒன்றிணைந்து நாட்டில் ஏற்பட்டிருக்கும் சிக்கலான நிலைமையை உடனடியாகத் தீர்க்கவேண்டுமென்று அறைகூவல் விடுத்திருக்கிறது ரஷ்யா.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *