ஒட்டகங்களுக்கான ஐந்து நட்சத்திர ஹோட்டல் ரியாட், சவூதி அரேபியாவில் திறக்கப்பட்டது.

ஒட்டகங்களுக்குத் தேவையான சகல சேவைகளையும் கொடுக்கும் 120 தங்குமிடங்களைக் கொண்ட ஹோட்டலொன்று சவூதி அரேபியாவில் ரியாட் நகரில் திறக்கப்பட்டிருக்கிறது. அங்கே சுமார் 50 ஊழியர்கள் ஒட்டகங்களைப் பாதுகாத்தல் முதல் அவைகளை அழகுபடுத்தல் போன்றவைகளில் ஈடுபடுவார்கள்.

டிசம்பர் மாதத் தொடக்கத்தில் ஆரம்பித்து தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் அப்துல் அசீஸ் ஒட்டக விழாவை ஒட்டியே மேற்கண்ட ஹோட்டல் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. ஒட்டகத்தைப் பேணிப் பாதுகாக்க தினசரி சுமார் 100 டொலர்கள் கட்டணமாக அறவிடப்படுகிறது. சூடான பால் உட்பட ஒட்டகங்களுக்குத் தேவையான உணவும் அங்கே கொடுக்கப்பட்டு போட்டியில் பங்குபற்ற அவை தயார் நிலையில் கையளிக்கப்படும்.

பெதுவீன் என்றழைக்கப்படும் சவூதி அரேபியா உட்பட்ட அரபு நாடுகளின் பண்டைக்காலக் கலாச்சார வாழ்வின் முக்கிய சின்னமாக ஒட்டகம் விளங்குகிறது. அதையொட்டிய பாரம்பரியம், கலாச்சாரம் ஆகியவற்றைச் சர்வதேச அளவில் உயர்த்துவதற்காகவே அப்துல் அசீஸ் ஒட்டகத் திருவிழா வருடாவருடம் ஒழுங்குசெய்யப்படுகிறது.

உலகின் சகல பாகங்களிலிலுமிருந்து, தினசரி லட்சத்துக்குக் குறையாத பார்வையாளர்களை ஈர்க்கும் அந்த ஒட்டக விழா, பந்தயங்கள் மிகவும் பிரபலமானவை. ஒட்டகங்களை வளர்த்து அது போன்ற போட்டிகளில் ஈடுபட வைப்பது பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஒரு விளையாட்டாக விளங்கி வருகிறது.

சாள்ஸ் ஜெ. போமன்