மரியபூல் இரும்புத் தொழிற்சாலைக்குள்ளிருப்பவர்களை வெளியேற்ற விபரமான திட்டம் தேவையென்கிறது ஐ.நா.
ரஷ்யாவுக்குப் பயணித்து ஜனாதிபதி புத்தினைச் சந்தித்த ஐ.நா-வின் பொதுச் செயலாளரிடம் மரியபூல் நகரிலிருந்து பொதுமக்களை வெளியேற்ற அனுமதிப்பதாக புத்தின் தெரிவித்திருக்கிறார். சுமார் ஒரு மாதமாக உக்ரேனின் மரியபூல் நகரின் தொழிற்சாலை வளாகத்தினுள் தஞ்சம் புகுந்திருப்பவர்கள் சுமார் 1,000 பொதுமக்களும், 2,000 உக்ரேன் இராணுவத்தினரும் என்று குறிப்பிடப்படுகிறது.
புத்தின் கொடுத்திருக்கும் அனுமதி கோட்பாட்டு ரீதியில் மட்டுமே என்று அதை எப்படிச் செயற்படுத்துவது என்பது பற்றிய தெளிவான திட்டம் வரையப்படவேண்டும் என்று பொதுக் காரியதரிசி அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்திருக்கிறார். அத்திட்டத்தை ஏற்படுத்துவதற்காக ஐ.நா, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் இரண்டும் சேர்ந்த ஒரு குழுவை அவர் ஒழுங்குசெய்திருப்பதாகத் தெரிகிறது.
உக்ரேன் மீதான போர் நிலப்பரப்பிலும், வான் மூலமும் நடந்துவரும் அதே சமயம் ரஷ்ய அரசின் இணையத்தள ஊடுருவல் முயற்சிகளும் உக்ரேனின் அதிகார மையங்கள் மீது நடத்தப்பட்டு வருகின்றன. போர் ஆரம்பித்த இரண்டு மாதங்களில் சுமார் 200 இணையத்தளத் தாக்குதல்கள் ரஷ்ய தரப்பிலிருந்து நடாத்தப்பட்டதாக உக்ரேன் அரசு தெரிவித்திருக்கிறது. குறிப்பிட்ட இணையத்தளத் தாக்குதல்கள் நடத்தப்பட்ட அதே சமயத்தில் அதே அதிகார மையங்கள் மீதான ஆயுதத்தாக்குதல்களும் நடத்தப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்