டென்மார்க்கில் நத்தார், புதுவருடகால கொரோனாக்கட்டுப்பாடுகள்
கொரோனாத் தொற்றலைக் கட்டுக்குள் கொண்டுவர தற்போதுள்ள கடுமையான கட்டுப்பாடுகளை நத்தார், புதுவருடக் காலத்தில் நீடிப்பதுடன் நாட்டின் சில பாகங்களில் அதையும் விடக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று டென்மார்க்கின் பிரதமர் அறிவித்தார்.
“தொற்றுக்கள் கடுமையாகப் பரவிக்கொண்டிருக்கின்றன. எங்கள் முன்னால் சில பாரமான, குளிரான மாதங்கள் இருக்கின்றன. பெப்ரவரி 28 ம் திகதிவரை தற்போதுள்ள கட்டுப்பாடுகள் தொடருவதுடன் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் கொபன்ஹாகன் நகரைச் சுற்றியிருக்கும் 38 நகரங்களில் மக்கள் தொடர்புகள் மேலும் கட்டுப்படுத்தப்படும்,” என்று அறிவித்தார் பிரதமர் மெத்தெ பிரடரிக்ஸன்.
பெப்ரவரி 28 ம் திகதிவரை தற்போதுள்ளது போல 10 பேர்களுக்கு மேல் கூடுதல் தடுக்கப்படுகிறது. நாட்டின் 38 நகரங்களில் 9ம் திகதி புதன்கிழமை முதல் உணவுவிடுதிகள் மூடப்பட்டு, வீட்டுக்கெடுத்துச் சென்று சாப்பிடுகிறவர்களுக்கு மட்டும் விற்கலாம் என்பது சட்டமாகிறது. 5ம் வகுப்புக்கு மேல் படிக்கிற மாணவர்களெல்லோரும் வீட்டிலேயே கற்கவேண்டும். பொதுச் சேவைகள் அனைத்தும் மூடப்படும், பொது அலுவலகங்களில் கட்டயாமாக வேலைக்குச் செல்லவேண்டியவர்கள் தவிர மற்றவர்கள் வீட்டிலேயே வேலைசெய்யலாம் என்று அறிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நகரங்களில் இச்சட்டங்கள் ஜனவரி 3ம் திகதிவரை அமுலிலிருக்கும்.
“தடுப்பு மருந்து தயாராகிக்கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை வெளிச்சம் எங்கள் முன்னால் ஏற்றிவைக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சிறிது காலத்தில் இந்த மோசமான காலத்தைத் தாண்டிவிடுவோம்,” என்று மேலும் குறிப்பிட்டார் டென்மார்க்கின் பிரதமர்.
சாள்ஸ் ஜெ. போமன்