ரோவால்ட் டாலின் சார்பில் கேட்கப்பட்டிருக்கும் மன்னிப்பு

பல ஆண்டுகளின் முன்னரே இறந்துவிட்ட பிரபல எழுத்தாளர் ரோவால்ட் டாலின் இணையப் பக்கத்தில் அவரது குடும்பத்தினர் அவர் யூதர்களை இகழ்ந்து வெவ்வேறு சமயங்களில் குறிப்பிட்டிருக்கும் கருத்துக்களுக்காக மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள்.

30 வருடங்களுக்கு முதல் தனது 74 வயதில் இறந்த ரோவால்ட் டால் இளவயதினரிடையே உலகமெங்கும் இன்றும் பிரபலமாக இருக்கும் ஒரு எழுத்தாளர். அவரது புத்தகங்களில் “Charlie and the Chocolate Factory”, “The BFG”, “Matilda”, “Fantastic Mr Fox”, “The Witches” ஆகியவை சினிமாக்களாகி வெற்றியும் பெற்றிருக்கின்றன.

ரோவால்ட் டாலின் மேன்மையான தன்மைகளிடையே ஏற்படும் ஒரு களங்கமாக யூதர்களைப் பற்றி அவர் ஆங்காங்கே குறிப்பிட்டிருப்பவை அடிக்கடி சுட்டிக்காட்டப்படுவதுண்டு. அவைகளில் முக்கியமானது குறிப்பிட்ட ஒரு சஞ்சிகைக்கான பேட்டியொன்றில் அவர்  ”யூதத் தன்மையில் பகைமையைத் தூண்டும் ஒரு பண்பு உள்ளது”…………….”கேவலமான மனிதரான ஹிட்லர் கூட எந்த காரணமும் இல்லாமல் யூதர்களுக்குத் தொந்தரவு கொடுக்க முற்படவில்லை” என்று சொல்லியிருப்பதாகும்.

மறைந்த எழுத்தாளரின் இணையப் பக்கத்தில் தற்போது அவரது குடும்பத்தினர் அவருடைய குறிப்பிட்ட கருத்துக்களுக்காக மன்னிப்புக் கேட்டிருக்கிறார்கள். “அவர் தனது படைப்புக்களில் தனது உயர்ந்த பண்பைக் காட்டியிருப்பதைப் போல இது அவரது மோசமான கருத்து என்று எண்ணி மன்னிப்போம். அவரது தரமான எழுத்துக்களுக்காக அவரை நினைவு கூர்வோம்,” என்று அவரது குடும்பத்தினர் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

இச்சினிமாக்களில் “The BFG” சினிமாவை உருவாக்கியவர் பிரபல படைப்பாளரான ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் – ஒரு யூதர். அவரிடம் அச்சினிமாவை உருவாக்கிக்கொண்டிருக்கும்போது இதுபற்றி ஒரு பத்திரிகையாளர் கேட்டபோது “அதுபற்றி எனக்குத் தெரியாது. ஆனால் இந்தச் சினிமாவின் கதை மனிதர்களிடையே இருக்கும் வேறுபாடுகளை உன்னதப்படுத்துவதாகும். அதையே நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *