ஹொங்கொங்கில் தொடர்ந்தும் ஜனநாயகக் கோரிக்கையாளர்கள் கைது.
செவ்வாயன்று ஹொங்கொங்கில் மேலும் எட்டு முக்கிய அரசியல் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. எதிர்க்கட்சியைச் சேர்ந்த அவர்கள் ஹொங்கொங்கில் ஜனநாயக உரிமைகளைக் கோரி வருபவர்களாகும்.
சீனாவின் ஒரு பாகமாக இருந்த ஹொங்கொங்கில் இவ்வருட ஆரம்பத்திலிருந்தே குடிமக்களின் மனித உரிமைகள் கட்டுப்படுத்தப்பட ஆரம்பித்தன. அதுவரை சீனாவை விட வித்தியாசமான முறையில் மனித உரிமைகளை அனுபவித்து வந்த ஹொங்கொங் மக்கள் அதை எதிர்த்துக் குரல்கொடுக்கவும் அதற்காகப் போராட்டங்களை நடாத்தவும் ஆரம்பித்திருந்தனர். அப்படியான போராட்டங்களுக்கும் கோரிக்கைகளுக்கும் ஐரோப்பிய, அமெரிக்க நாடுகள் ஆதரவு கொடுத்து வந்தன.
ஹொங்கொங்கையும் சீனாவின் சட்டங்களை மதிக்கவேண்டிய பிரதேசமே என்று சீனப் பாராளுமன்றத்தில் சட்டமியற்றிய சீனா போராட்டத்தை நசுக்கி அதில் ஈடுபட்டவர்களின் தலைவர்களையும் சுதந்திர ஊடகங்களின் உரிமையாளர்களையும் ஒவ்வொருவராகக் கைது செய்யத் தொடங்கியிருந்தது. அதன் தொடராகவே தற்போது மேலும் எட்டு அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
ஜூலை 1 ம் திகதியன்று தொடங்கிய மிகப்பெரும் அமைதிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீதிருந்துதான் கைதுகள் ஆரம்பமாகின. அதைத் தொடர்ந்து ஹொங்கொங்கைத் தனது பகுதியாக வைத்திருந்த ஐக்கிய ராச்சியம் அச்சமயத்தில் பிறந்தவர்களெல்லோருக்கும் ஐக்கிய ராச்சியக் குடியுரிமை கொடுக்கப்போவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து அமெரிக்க அரசு ஹொங்கொங்க் மக்கள் அமெரிக்காவுக்குக் குடிபெயரக்கூடியதாகச் சட்டங்களை இலகுவாக்குவதாக அறிவித்திருக்கிறது.
மேலும் ஐரோப்பா, அமெரிக்கா போன்றவை சீனாவின் முக்கிய தலைவர்கள் மீது கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது. சீனாவின் பொருட்கள் மீதும் தண்டனை வரிகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த வாரங்களிலும் இன்றும் நடந்த கைதுகளுக்குப் பின்னர் அமெரிக்கா சீனா மீதான வர்த்தகக் கட்டுப்பாடுகளை மேலும் அதிகரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.
இதையடுத்து அமெரிக்காவின் தூதரைச் சீனாவின் தலைமை அழைத்துத் தனது நாட்டின் அரசியலில் குறுக்கிடுவதற்காக அதிருப்தியைத் தெரிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்