ஆஸ்ரேலியாவுடன் வர்த்தகப் போரில் சீனா
பலவித மனக்கசப்புக்களால் ஆஸ்ரேலியாவின் ஐந்து முக்கிய மாட்டிறைச்சி ஏற்றுமதியாளர்களிடமிருந்து கொள்வனவு செய்வதை நிறுத்திவிட்ட சீனா, தான் ஆறாவது ஆஸ்ரேலிய நிறுவனத்திடமிருந்தும் (Meramist Pty Ltd) கொள்வனவை நிறுத்துவதாக அறிவிக்கிறது. இறைச்சியை பொதி செய்வதிலும், உள்ளிருப்பதின் விபரங்களில் ஒழுங்கின்மையிருப்பதாலும் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகச் சீனா அறிவிக்கிறது.
மே மாதத்தில் நான்கு ஆஸ்ரேலிய நிறுவனங்களிடமிருந்தும் ஆகஸ்ட் மாதத்தில் ஐந்தாவது நிறுவனத்திடமிருந்து மாட்டிறைச்சி இறக்குமதி செய்வதைச் சீனா நிறுத்தியது. அச்சமயத்தில் கொவிட் 19 சீனாவிலிருந்து ஆரம்பமாகியதா என்ற சந்தேகத்துக்கு விடையறிய விசாரணை நடத்துமாறு கோரிய நாடுகளில் ஆஸ்ரேலியாவும் ஒன்றாக இருந்ததாலேயே சீனா அந்த நடவடிக்கையை எடுத்ததாகக் குறிப்பிடப்பட்டது. ஆஸ்ரேலியாவின் 20 விகிதமான மாட்டிறைச்சியை வாங்கும் நாடான சீனாவின் இறக்குமதி ஆஸ்ரேலியப் பொருளாதாரத்துக்குப் பெரும் பாதிப்பாகியது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கொவிட் 19 கிருமிகள் ஆஸ்ரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சி மூலம் பரவியிருக்கலாம் என்றும் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சாள்ஸ் ஜெ. போமன்