சீனாவுக்கும் சுவிஸுக்கும் இடையிலான சர்ச்சைக்குரிய ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது.
இரகசியமான ஒப்பந்தம் ஒன்றின் மூலம் சீனப் பொலீஸார் சுவிஸுக்குப் போய் அங்கே அகதிகளாக வந்திருந்த சீனர்களை விசாரிக்க அனுமதிக்கும் இரண்டு நாடுகளுக்குமான ஒப்பந்தமொன்று நிறுத்தப்பட்டது. 2015- லிருந்து இவ்வொப்பந்தப்படி சீனப் பொலீசார் சுவிஸின் வேண்டுகோளுக்கிணங்க அங்கே அகதித்துவம் கோரி வந்திருந்த சீனர்களின் அடையாளங்களைச் சோதித்து அவர்கள் சுவிஸில் தங்கியிருக்க சுவிஸ் அனுமதிக்கலாமா என்ற விடயத்தில் பிரத்தியேக ஆலோசனை வழங்கி வந்திருந்தார்கள்.
சீனர்கள் தங்கள் நாட்டிலிருந்து தப்பி வெளிநாடுகளுக்குப் போகிறவர்களின் உறவினர்களைச் சீனாவில் தொல்லைக்கு உள்ளாக்குவது தெரிந்திருந்து சுவிஸ் சீனாவின் பொலீஸ் உதவியைப் பெறுவது பகிரங்கப்படுத்தப்படவில்லை. மட்டுமன்றி அந்த ஒப்பந்தத்தின்படி சீனப் பொலீஸார் சுவிஸுக்கு விஜயம் செய்வதும் பொதுமக்களுக்கு உத்தியோகபூர்வமாகச் செய்யப்படாமல் இரகசியமாகவே நடந்தேறி வந்தது.
இந்த இரகசிய ஒப்பந்தம் இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தில் (NZZam Sonntag) சஞ்சிகை ஒன்றால் வெளிப்படுத்தப்பட்ட பின்னரே சுவிஸ் அரசு அப்படியொன்று இருப்பதையே ஒத்துக்கொண்டது. 2015 இல் அந்த ஒப்பந்தம் உண்டாக்கப்பட்டதாகவும் அதன்படி ஒரேயொரு முறைமட்டும் 2016 இல் சீனாவின் உதவியுடன் 13 பேரைச் சீனாவுக்குத் திருப்பியனுப்பியதையும் சுவிஸ் அரசு வெளிப்படுத்தியது. அவர்களி 4 பேர் சுவிஸில் அகதித்துவம் கோரியவர்களாகும். ஆனால், அந்த நடவடிக்கை பற்றிய விபரங்களெல்லாவற்றையும் சுவிஸ் அரசு இதுவரை மறைத்தே வருகிறது.
செர்பியா, இத்தாலி ஆகிய நாடுகளும் இதுபோன்ற ஒப்பந்தங்களைச் சீனாவுடன் வைத்திருக்கிறது. செர்பியாவிலும் இத்தாலியிலும் சீனப் பொலீஸார் வீதிகளில் காவலுக்குச் சுற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். டிசம்பர் 7 ம் திகதியுடன் சீனாவுடன் உண்டாக்கப்பட்டிருந்த ஒப்பந்தம் முடிந்துவிட்டதாகவும் அது மீண்டும் தொடரப்படாது என்றும் சுவிஸ் அரது தற்போது அறிவித்திருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்