ஜோன் லென்னொன் தனது கொலைகாரனுக்குக் கையெழுத்து வைத்துக் கொடுத்த இசைத்தட்டு ஏலத்தில் விடப்படுகிறது.
பிரபல ரொக் அண்ட் ரோல் இசைக் கலைஞர் ஜோன் லென்னன் அவரது மனைவி யொகோ ஓனோவும் முத்தமிடும் படத்தைக் கொண்ட Double Fantasy, என்ற இசைத்தட்டொன்றை சில மணித்தியாலங்களின் பின்னால் தன்னைக் கொல்லப் போகிறவனுக்கு ஒப்பமிட்டுக் கொடுத்தார் லென்னன். குறிப்பிட்ட அந்த இசைத்தட்டு இன்னும் சில நாட்களில் தன்னை ஏலத்தில் வாங்கப்போகும் புதிய உரிமையாளரைச் சந்திக்கப்போகிறது.
1998 இல் முதல் தடவையாக ஏலம் விடப்பட்ட சரித்திர பிரசித்தி பெற்ற, ஒரு வேதனையான கதையையும் கொண்ட அந்த இசைத்தட்டு நபம்பர் 23 ம் திகதி மூன்றாம் தரமாக ஏலத்துக்கு விடப்பட ஆரம்பித்தது. 400,000 அமெரிக்க டொலர்கள் என்ற ஆரம்பத் தொகைக்கு ஏலம் ஆரம்பித்திருக்கிறது. இன்னும் மூன்று நாட்களில் முடிக்கப்படவிருக்கும் அதன் விலை ஒரு மில்லியனுக்கு அதிகமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் மூலம் இசைத் தட்டுக்களின் சரித்திரத்தில் அதிக விலைக்கு விற்கப்பட்ட ஒரு பிரதி என்ற இடத்தை அது பெறலாம்.
40 ஆண்டுகளுக்கு முன்பு டிசம்பர் 8 ம் திகதியன்று The Dakota, என்ற மான்ஹட்டன், நியூ யோர்க்கிலிருக்கும் தனது வீட்டிலிருந்து மாலை ஐந்து மணியளவில் ஸ்டூடியோவுக்குப் புறப்பட்ட லென்னன் அந்த இசைத்தட்டுப் பிரதியை வீட்டு வாசலில் வைத்து மார்க் சாப்மானுக்கு ஒப்பமிட்டுக் கொடுத்தார். இரவு பதினொரு மணியளவில் லென்னன் திரும்பி வந்தபோது அவரை அவ்வீட்டு வாசலில் சுட்டுக் கொன்றான் அதே மார்க் சாப்மான்.
நீலப் பேனா ஒன்றினால் கையெழுத்திட்ட லென்னொன் அதன் கீழே 1980 என்றும் எழுதியிருக்கிறார். அந்த இசைத்தட்டு கொலைக்குப் பின்னர் பக்கத்திலிருந்த வீட்டுத் தோட்டப் பூச்சாடி ஒன்றின் கீழிருந்து ஒருவரால் எடுக்கப்பட்டுச் சாட்சிப் பொருளாக பொலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. எனவே ‘Det M. Struk #7247 20 DET Sqd 1330 Hrs 12/9/80′” என்று அதில் பொலீஸாரால் எழுதப்பட்டிருப்பதையும் காணலாம்.
Goldin Auctions என்ற ஏல நிறுவனம் இசைத்தட்டை லென்னொனின் 40 நினைவு தினத்தைக் கௌரவிப்பதற்காக விற்பதாகக் குறிப்பிடுகிறது. பீட்டில்ஸ் இசைக்குழுவின் பாடகராகவும், கவிஞராகவும் இருந்த லென்னொனின் இசைப்பிரியர்கள் வேதனையான நினைவுகளைத் தன்னுள்ளடக்கிய அந்த இசைத்தட்டு விற்கப்படுவதைப் பற்றித் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர்.
சாள்ஸ் ஜெ. போமன்