கிரீன்லாந்தைத் தனதாக்கிக்கொள்ள அதன் மீது ஆசை வலை விரிக்கும் முயற்சியை அமெரிக்கா தொடர்ந்துகொண்டிருக்கிறது.
வட துருவத்திலிருந்து 600 கி.மீ தூரத்தில் ஆர்ட்டிக் வட்டத்தில் கிரீன்லாந்திலிருக்கிறது,[தூலெ நகரத்தில்] சுமார் 600 பேர்களைக் கொண்ட அமெரிக்காவின் இராணுவத் தளம். அந்த இராணுவத் தளத்தில் பல சேவைகளைக் கொடுப்பதற்கான மிக முக்கியமான பொறுப்பை ஒரு டேனிஷ்-கிரீன்லாந்து நிறுவனத்துக்கே அமெரிக்கா நீண்ட காலமாகக் கொடுத்து வந்திருந்தது. அந்த வாய்ப்பு பின்னர் ஒரு அமெரிக்க நிறுவனத்திடம் விடப்பட்டது.
ஆர்ட்டிக் பிராந்தியத்தில் தனது இருப்பைத் தக்கவைத்துக்கொள்தில் மிக ஆர்வத்துடனிருப்பதை சமீபத்தில் டிரம்ப் “கிரீன்லாந்தை வாங்க அமெரிக்கா விரும்புகிறது,” என்று டென்மார்க்குக்கு ஆசை காட்டினார். [டென்மார்க் தான் தனது நாட்டின் ஒரு பகுதியாக கிரீன்லாந்தைப் பரிபாலிக்கும் நாடு] டேனிஷ் அரசு அதை மறுத்ததால் இரு நாடுகளுக்குமிடையே உறவுகளில் விரிசல் கண்டன. அதன் ஒரு பாகம் தான் அமெரிக்க இராணுவத் தளத்தில் சேவைகள் டேனிஷ்-கிரீன்லாந்து நிறுவனத்துக்கு மறுக்கப்படக் காரணமென்று குறிப்பிடப்பட்டது.
வடதுருவத்திலிருக்கும் இயற்கை வளங்கள் பல வல்லரசுகளையும் நாக்குகளை ஊறவைத்துக்கொண்டிருக்கின்றனவே தவிர, அவர்களால் வறுக முடியாதவையாக இருக்கின்றன. அவற்றில் பெரும்பகுதியை யார் சுரண்டிக்கொள்வது, ஆளுமைக்குள் கொண்டுவருவது என்பதில் அவைகளிடையே பனிப்போராக நடந்துகொண்டிருக்கின்றன.
ஆசை வலை விரிப்பதில் தளர்ந்து விடாத அமெரிக்கா இவ்வருடம் ஜூன் மாதத்தில் கிரீன்லாந்தின் தலை நகரமான நூக்கில் தனது தூதுவராலையமொன்றைத் திறந்திருக்கிறது. அந்த நாட்டில் பல முதலீடுகளைச் செய்து வருகிறது. அத்துடன் தூலெ இராணுவத் தளத்தில் மீண்டும் டேனிஷ்-கிரீன்லாந்து நிறுவனங்களுக்கு முதலிடம் கொடுப்பதாக உறுதியளித்திருக்கிறது.
அமெரிக்காவைத் தவிர ரஷ்யாவும் சீனாவும் கூட வட துருவ வட்டத்தில் தமது இருப்பைப் பலப்படுத்திக்கொள்ளத் துடிக்கின்றன. கிரீன்லாந்தில் வலுவாகக் காலூன்றுவதன் மூலம் அப்பிராந்தியத்தில் தனது இராணுவத்தை அதிகரிக்கலாமென்று அமெரிக்கா திட்டமிடுகிறது. அதற்காக டேனிஷ் – கிரீன்லாந்து அரசுகளின் ஆதரவைப் பெறவே கிரீன்லாந்தில் வர்த்தகத்தைப் பலப்படுத்த உதவி வருகிறது அமெரிக்கா.